Aran Sei

சரத்பவார் விவசாய சட்டங்களை ஆதரித்தாரா? – கடிதத்தை பரப்பும் பாஜக

வாஜ்பாயின் தலைமையிலான அரசின் வேளாண் சந்தை குழு சட்டம் (APMC) குறித்து பல மாநிலங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி சரத் பவார் சட்டத்தை ஏற்க வைத்தார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி டிசம்பர் 7 ஆம் தேதி தெரிவித்ததாக தி இந்து  கூறுகிறது.

மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரவளித்து வருகிறார். சட்டங்களுக்கு எதிரே உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியும் வருகிறார்.

இந்நிலையில், சரத் பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விவசாய அமைச்சராக இருந்த போது, மத்திய அரசின் வேளாண் சந்தைக் குழு சட்டத்தை ஏற்க வேண்டும் என, மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்களை பாஜக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. வாஜ்பாய் ஆட்சியில் தனியார் நிறுவனங்கள் விவசாயத்தை கைப்பற்ற வேலை செய்து விட்டு, இப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போடுவது எப்படி நியாயம் என பாஜகவினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான மகேஷ் தபசே, “சரத் பவார் அச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல மாநில அரசுகளுக்கு விளக்கினார். உடனே, மாநில அரசுகள் அதை ஏற்றுக் கொள்ள முன் வந்தன. விவசாயிகளின் நலனை காக்க அச்சட்டத்தை சரத் பவார் மாற்றியமைத்த பிறகே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவரும், மஹாராஷ்ட்ர மாநில அமைச்சருமான நவாப் மாலிக், “சரத் பவார் விவசாய அமைச்சராக இருந்த போது அவர் மாநிலங்களின் ஒருமித்த சம்மதத்தை பெற்ற பிறகு தான் முடிவெடுத்தார், எதையும் மாநில அரசுகள் மீது திணிக்கவில்லை. ஆனால், மோடி அரசாங்கம் சர்வாதிகாரமாக உள்ளது. விவசாயச் சட்டங்களை மாநிலங்களின் மீது திணிக்கிறது” என்று கூறியுள்ளார்.

“தேசியவாத காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு, பவார் தனியார்மயமாக்குதலை ஆதரித்தார் என கடிதங்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளால் அரசுக்கு பிரச்சினை வரும் என பாஜக நினைப்பதால் தான் இப்படி எல்லாம் செய்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக விவசாயிகளின் கட்சி அல்ல, விவசாய உற்பத்தியை கொள்ளையடிக்கும் கட்சி என்று தான் மக்கள் எப்போதுமே நம்புகிறதாகவும் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்