போராட்டம் காரணமாகச் சாலைகள் மற்றும் பொது இடங்களைக் காலவரையறையின்றி ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஷாகீன் பாக் வழக்கில் உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்ட திருத்தங்களை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. டெல்லி ஷாகீன் பாக் என்ற இடத்தில் நடந்த போராட்டத்தில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 2020 மார்ச் 24-ம் தேதிவரையில் நீடித்த ஷாகீன் பாக் போராட்டத்தில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பங்கேற்று சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தினார்கள்.
கொரோனா தொற்றுப் பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகே சிஏஏ-க்கு எதிரான மக்களின் தொடர் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, ஷாகீன் பாக் போராட்டம் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கிறது என வழக்கறிஞர் அமித் ஷாகினி வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருந்த்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை நேற்று விசாரித்தது.
எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை இருந்தாலும் அது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் கூறியது.
Public roads and places cannot be occupied indefinitely by protesters says Supreme Court on petitions seeking guidelines and other directions on the right to protest, in wake of Shaheen Bagh protest pic.twitter.com/TXlpEgiLul
— ANI (@ANI) October 7, 2020
”காலனிய ஆட்சியில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தைப் போல ஜனநாயக நாட்டில் நடைபெறும் சுய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று நீதிபதிகள் அமர்வு விமர்சித்திருந்தது.
Mode and manner of dissent against colonial rule cannot be equated with dissent in self-ruled democracy: SC in Shaheen Bagh verdict #SupremeCourt #ShaheenBagh https://t.co/leDGwQ6kiW
— Bar & Bench (@barandbench) October 7, 2020
”ஷாகீன் பாக் போராட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இது போன்ற தொடர் போராட்டங்களை அகற்றுவது குறித்து நிர்வாகமே முடிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக செயல்பாடுகளை நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்பு மறைத்துக் கொள்ளக் கூடாது” என்றும் நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
Justice Kaul: In what manner the administration should act is their responsibility and should not hide behind court orders to carry out administrative functions.
— Live Law (@LiveLawIndia) October 7, 2020
”நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடும் உரிமை ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உண்டு. ஆனால், பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் குறிப்பிட இடங்களில் மட்டும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.” என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில், வேலைவாய்ப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்திப் பேரணி நடத்துவதற்கு மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தார்கள்.
அதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சகம், “சில மணிநேரங்களுக்கு முன் உச்சநீதி மன்றம் போராட்டத்துக்காகப் பொது இடங்களை ஆக்கிரமிப்பது குறித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்புக்கு நாங்கள் உடன்பட வேண்டியுள்ளதால் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கொரோனா பேரிடர்ச் சூழலால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்குபெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் மேற்கு வங்காள அரசு கூறியிருந்தது.
ஆனால், மாநில அரசின் அனுமதி இல்லாமல் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா தலைமையில் இன்று தடையை மீறி பேரணி நடைபெற்றுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.