மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காகச் சிங்குவில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லையை அடைந்த ஷாஹீன் பாக் போராட்டக்காரர் பில்கிஸ் பானுவைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
82 வயதான பில்கிஸ் பானு எனும் மூதாட்டி, டெல்லி ஷாஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நடைபெற்ற தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர். இதன் காரணமாக இவருக்கு, `தாதி ஆஃப் ஷாஹீன் பாக்’, அதாவது `ஷாஹீன் பாக்கின் பாட்டி’ என்ற பெயர் கிடைத்தது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ‘2020-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களின்’ பட்டியலிலும் பில்கிஸ் பானு இடம்பெற்றார்.
மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்தச் சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே இச்சட்டங்களை எதிர்த்து அவர்கள் டெல்லியில் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடச் சென்ற பில்கிஸ் பானு கைதாகியுள்ளார்.
கைதாவதற்கு முன், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று பில்கிஸ் பானு கூறியுள்ளதாக தி குயின்ட செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக எல்லையை அடைந்தவுடன், டெல்லிக் காவல்துறையினர் பில்கிஸ் பானுவைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். பில்கிஸ் பானுவை சிங்கு எல்லையில் தடுத்து நிறுத்தியதாகவும், தென்கிழக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குக் காவல்துறையினர் அழைத்துச் செல்வார்கள் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் நியூஸ் 18 இடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.