Aran Sei

ஷாகீன் பாக் – உச்சநீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்துக் கூட்டம்

அருந்ததி ராய், சஞ்சய் ஹெக்டே, நிவேதிதா மேனன், பெஜ்வாடா வில்சன், யோகேந்திர யாதவ்

க்டோபர் 22-ம் தேதி அறிவார்ந்த ஆளுமைகள் பலர் போராட்டங்களை தடுப்பதற்கு வழி வகுக்கும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைக் கண்டிக்க டெல்லியில் ஒன்று கூடினர்.

ஷாகீன் பாக் போராட்டத்திற்கு எதிரான ஒரு மனுவை விசாரிக்கும் போது உச்சநீதிமன்றம்,  “கருத்து வேறுபாடும் ஜனநாயகமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. ஆனால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்தான் போராட்டம் நடத்த வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தது.

ஷாகீன்பாக் போன்ற போராட்டங்கள் கூடாது – உச்சநீதி மன்றம்

அக்கறையுள்ள குடிமக்களின் கூட்டமைப்பு (concerned citizens collective) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் “வீதிகள் அமைதியாகும் பொழுது ஜனநாயகம் இறந்து விடுகிறது” என்ற முழக்கத்தின் கீழ் போராடும் உரிமையின் அவசியத்தை நிலைநாட்ட வேண்டிய காலம் வந்துள்ளது என்று கலந்து கொண்ட செயல்பாட்டாளர்கள் கூறினர்.

பெண்ணிய கோட்பாட்டாளரான நிவேதிதா மேனன், “பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களும் புனிதமானவைதானா என்று நாம் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டும் ஒரு சட்டம் என்று அவர் குற்றம் சாட்டினார். “இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி முன் வைக்கப்படவில்லை, இந்து ராஷ்டிரா என்ற கொள்கையின் கீழ் இயற்றப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

வடகிழக்கு டெல்லிக் கலவரத்தில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பற்றிய வழக்குகள் தொடர்பாக உண்மை அறியும் பணியில் இருந்த நபர்கள் என்று நிவேதிதா மேனன் கூறினார். ஏராளமான சமூக ஆர்வலர்கள் சிறையில் தவிக்கிறார்கள் என்றும் அவர் வருந்தினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) அரசியல் சிந்தனைப் பேராசிரியராக நிவேதிதா  மேனன், “இந்தியாவில் போராடும் உரிமைகள் பற்றி மிகவும் தீவிரமான அடிப்படையான விவாதத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸிலும், சமீபத்தில் வடக்கு டெல்லியில் உள்ள மாடல் டவுனிலும் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதில் காவல்துறையினரின் பங்கு “கண்டிக்கத்தக்கது” என்று கருத்து தெரிவித்த அவர், காவல்துறை ‘இந்து ராஷ்ரத்தின்’ தனியார் இராணுவமாக மாறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

”இந்திய அரசியலமைப்புச் சட்டமே கருத்து வேறுபாடுகளின் உருவாக்கமே.” என்று கூறினார், உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் ஹெக்டே.

டாக்டர் அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை சுட்டிக்காட்டி, அந்தக் கருத்து வேறுபாடு, இறுதியில் அம்பேத்கரை அரசியலமைபு சபைக்கு கொண்டு வந்தது” என்று சுட்டிக் காட்டினார் சஞ்சய் ஹெக்டே.

“அரசியலமைப்புச் சட்டம் என்பதே அந்தக் கருத்து வேறுபாட்டின் மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரித்ததன் விளைவாகவே உருவானது. நம்முடைய முன்னோடிகள் ஆண் பெண் பேதமின்றி ரத்து செய்ய முடியாத உரிமைகளைக்கொண்ட ஒரு சுதந்திர நாட்டிற்காகப் போராடினர்.” என்றார் சஞ்சய் ஹெக்டே.

“எனினும் கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. கருத்து வேறுபாடு அணைத்து விட வேண்டிய நெருப்பாகக் கருதப்படுகிறது” என்று கருத்து தெரிவித்தார் உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் வசதியானவர்களை பாதிப்பதுமாக“ இந்த கருத்து இருக்க வேண்டும் என்று கூறினார். “ஒரு எதிர்ப்பாளர் இல்லாமல் இங்கு எந்தப் போராட்டமும் நடக்காது, எதிர்ப்பாளரைப் பாதுகாப்பதில்தான் நமது ஜனநாயகத்தின் வலிமையே உள்ளது”. என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட காணொலி ஒலிபரப்பட்டது. அதில் அவர் “ஷாகின் பாக் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஒரு விசித்திரமான உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லை என்றும், போராட்டங்கள் எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதைக் காவல்துறையினரே முடிவு செய்வார்கள் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

“போராட்டங்களில் பங்கேற்ற எதிர்ப்பாளர்கள் மத பாகுபாடு மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசினார்கள். ஆனால், இப்போது அவர்களே குறிவைக்கப்படுகின்றனர்” என்று அவர் கூறினார்.

மேலும் “இந்த நாட்டின் இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் உமர் காலித் போன்றவர்களே கைது செய்யப்படுகின்றனர்,” என்று பூஷண் கூறினார். பல செயற்பாட்டாளர்கள் “வன்முறையை தூண்டுவதாக டெல்லிக் காவல்துறையினரால் பொய்யாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள், விசாரணையே ஒரு சதித்திட்டமாக மாறியுள்ளது. அவர்கள் மீது கடுமையான சட்டமான uapa போன்றவற்றை சுமத்துவதன் மூலம் அவர்கள் ஜாமீன் பெற முடியாதபடி செய்யப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

இப்போது டெல்லி போலீசின் சதித்திட்டம் அம்பலமாகி வருவதாகவும் அவர் கூறினார். “டெல்லிக் காவல்துறை தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் அவர்கள் 1950-களில் இருந்த உ.பி காவல்துறை போலவே கருதப்படுவார்கள்” என்று கூறினார். மேலும் 1950-களில் இருந்த உ.பி காவல்துறை பற்றி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா, “இது இந்நாட்டின் மிகப்பெரிய மாஃபியா கும்பல்” என்று குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் தனது கருத்தை பதிவு செய்த ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் `நீதிபதிகள் சரியான அனுமதிக்கப்பட்ட இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாதா? போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி தர மறுக்கிறது. பின்பு சட்டத்தை மீறிப் போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்கிறது” என்று கூறினார்.

மேலும் சோசலிச தலைவர் ராம் மனோஹர் லோஹியா “வீதிகள் வெறிச்சோடிப் போகும்போது பாராளுமன்றம் வழிதவறிப் போகும்” என்று கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

சமூக ஆர்வலர்களின் கைது செய்யப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் குறித்து புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் கருத்து தெரிவிக்கையில், “நான் இங்கு பேசும் ஒவ்வொரு முறையும் இன்று சிறையில் இருக்கும் அனைவரின் உருவங்களையும் நான் காண்கிறேன். இந்த நாட்டில் இன்னும் மதிக்கப்படுபவர்களாக யாரும் இல்லை. எல்லோருமே அவர்களுடைய ரத்து செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உள்ளனர். அடுத்து யார் குறி வைக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார்.

“பீமா கோரேகான் போராட்டங்களில் ஈடுப்பட்ட செயற்பாட்டாளர்கள், மாணவர் தலைவர்கள், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள், எல்லோருமே இலக்குதான்.” மேலும் “அரசியலமைப்பு சட்டம் பயனற்றதாகி விட்டது. காவல்துறையும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் நமக்குக் கற்பிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்ட அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

1960-களிலும் 1970-களிலும் பிரபலமான மக்கள் இயக்கங்களை இந்திய அரசு நசுக்கியதைத் தொடர்ந்து 1980-களிலும் 1990-களிலும் ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்தது நிகழ்ந்தது. அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவது அப்போது புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. ஆனால், “இப்போது நாம் பெரும் எண்ணிக்கையிலான சிறைவாசத்திற்கு எதிராக மன்றாடிக் கொண்டிருக்கிறோம். இது காஷ்மீர், வட கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடங்கியது. அங்கு ஆயிரக்கணக்கான கிராமவாசிகள், ஏழைகள் மற்றும் ஆதிவாசிகள் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். யுஏபிஏவின் கீழ் கைது செய்வது ஒரு நபரை நீண்ட காலத்திற்குத் முடக்குவதற்கான வழியாக உள்ளது” என்று கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் காரணமாக அசாம் மக்களுக்கு என்ன ஆனது என்பதைப் பாருங்கள் என்று கூறிய ராய், மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை இப்போது நாட்டின் பிற பகுதிகளிலும் அமல்படுத்த முயற்சிக்கிறது என்றார்.

“நாஜி ஜெர்மனியில் நியூரம்பெர்க்கில் இருந்ததைப் போலவே, தான் அங்கீகரிக்கும் ஆவணங்களை காட்டுமாறு அரசு கேட்கிறது – இது முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடிகளின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்குவதற்குச் சமமாகும்” என்று அவர் கூறினார்.

கட்டுரை & படங்கள் – நன்றி : thewire.in
பகுதியளவு மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்