Aran Sei

பணியிடத்தில் பாலினப் பாகுபாட்டைப் பாலியல் துன்புறுத்தலாகக் கருதமுடியாது – கேரள உயர்நீதிமன்றம்

ணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பாகுபாடு, ‘பாலியல் துன்புறுத்தல்’ ஆக கருதப்படாது எனக் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் ராஜகோபால் என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். பாலின அடிப்படையில் ஒடுக்குமுறை செய்யும் போது, அது பாலியல் துன்புறுத்தல்தான் என்பது தனி நீதிபதியின் வாதமாக இருந்தது.

மேலும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தில், பாலியல் துன்புறுத்தல் என்பதன் விவரிப்பு முழுமையாக இல்லை எனவும், பாலியல் பாகுபாடு போன்ற பிற விஷயங்களும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகச் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தனி நீதிபதி வலியுறுத்தியிருந்தார்.

தனி நீதிபதியின் இந்தக் கருத்து சுட்டிக்காட்டப்பட்டபோது, இதற்குப் பதிலளித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.ஷஃபீக் மற்றும் பி.கோபிநாத் அமர்வு, பாலியல் பாகுபாடு பாலியல் துன்புறுத்தல் ஆகாது எனவும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டத்தின் (2013ன்) [POSH Act] கீழ் இது குற்றமாகாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பைக் குறித்து விவரித்த நீதிபதிகள், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் , “பாலியல் நோக்கத்தோடான அணுகுமுறையை மறைமுகமாகவோ, நேரடியாவோ வெளிப்படுத்துவது, அது வரவேற்கப்படாத விஷயமாக இருப்பது என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. இந்தச் செயல்கள் நடக்காத பட்சத்தில், அது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகாது” என்று தெரிவித்தனர்.

மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது களங்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது என்பதால், பாலின அடிப்படையிலான பாகுபாட்டைப் பாலியல் துன்புறுத்தல் என்று சொல்ல முடியாது எனவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமாக விசாரிக்கப்பட்டுக் கையாளப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்சொன்ன காரணங்களினால், ‘அனில் ராஜகோபால் மற்றும் கேரள அரசுக்கு இடையிலான வழக்கில் உயர் நீதிமன்றம் முன்பு அளித்திருந்த தீர்ப்பு சரியானதுதான் எனக் கேரள உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்