Aran Sei

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கேட்பவர்களை நாடுகடத்துங்கள்: சஞ்சய் ராவத்

Credits Indian Express

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற பரூக் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததற்கு முன்னாள் முதலமைச்சர் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிவு 370 மீண்டும் அமல்படுத்தி மாநிலத்தின் சிறப்பு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மெஹ்பூபா முப்தி மற்றும் ஃபரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம், “பரூக் அப்துல்லா அல்லது மெஹ்பூபா முப்தி, இந்திய அரசியலமைப்புக்கு எதிராக சீனாவின் உதவியை நாடும் வேறு யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட வேண்டும்.” என்று விமர்சித்துள்ளார்.

 

“அவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றித்திரியலாம்?” எனவும் சஞ்சய் ராவத் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக புதன்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “மெஹ்பூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் பிறர் காஷ்மீரில் இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370யை சீனாவின் உதவியோடு நடைமுறைப்படுத்த நினைத்தால், மத்திய அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

“காஷ்மீரில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்ற விரும்பும் நபர் தடுக்கப்படுவார் என்றால், அது ஒரு தேசதுரோகச் செயல் என்றே நான் கருதுகிறேன்.” என்று கூறியிருந்தார்.

கடந்த செவ்வாய் அன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மெஹ்பூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியாவில் வாழ்வதற்கு உரிமை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முதல்நாள் வீட்டில் சிறை வைக்கப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ள மெஹ்பூபா முப்தி, “ஜம்மு காஷ்மீரின் உரிமைகளைத் திரும்பப் பெறும்வரையில் இந்தியக் கொடி அல்லது வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டேன்.” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்