Aran Sei

’ஆதாரம் இல்லை’ – சேகர் ரெட்டி வழக்கு முடித்து வைப்பு

 

ண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் உட்பட 24 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கை, ஆதாரம் இல்லாததால் முடித்து வைக்கும்படி நீதிமன்றம் தீர்பபளித்துள்ளது.

கடந்த 2016-ஆம் நவம்பர் மாதம் மத்தியரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. அதன் காரணமாக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். வங்கிகளில் மணிக்கணக்காக நின்றதில், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

டிசம்பர் 5-ம் தேதி என்று முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக-வின் பொது செயலாளருமான ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்து தமிழக அரசியலிலும், அதிமுக தலைமையிலும் குழப்பம் ஏற்பட்டது.

டிசம்பர் 21 அன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நண்பரும், மணல் குவாரி உரிமையாளருமான தொழிலதிபர் சேகர் ரெட்டி என்பவரின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் பணக்கட்டுகளை  பதுக்கிவைத்திருப்பதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து, அவரின் வீடுகளும் அலுவலகங்களும் சோதனை செய்யப்பட்டது. அதில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளும், தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : India Today

அதை தொடர்ந்து அவரின் உறவினர்களான ப்ரேம் குமார் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியது. மொத்தம் 198 இடங்களில் நான்கு நாட்கள் நடந்த சோதனையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் உட்பட மொத்தம் ரூ.166 கோடி பணமும், 179 கிலோ தங்க கட்டிகளும் கிடைத்ததாக தகவல் வந்தது. மேலும் மாநில அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியாகவும் குற்றம் சாற்றப்பட்டது.  இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள் ப்ரேம் குமார், ஸ்ரீனிவாச ரெட்டி, ரத்தினம் உட்பட 6 பேர் மீது சிபிஐ போலீஸார் மூன்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகம் சார்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார் சேகர் ரெட்டி. இந்த கைதை தொடர்ந்து அவரின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

நன்றி : நக்கீரன்

தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டில் சோதனை  நடத்திய அதே நேரத்தில் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவுக்கு சொந்தமான சென்னை, பெங்களூரு வீடுகளிலும், ஆந்திராவில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரி துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அவருடைய மகன் விவேக் பாப்பிசெட்டியின் வர்த்தக நிறுவனங்களிலும் சோதனைகள் நடந்தன. மேலும் வரலாற்றில் முதன்முறையாக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் துணை ராணுவப் படையை நிறுத்தி, ராமமோகன்ராவின் அறையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 11-வது சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

சிபிஐ-யின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹர், குற்றம் சாட்டப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

நீதிபதி ஜவஹர் வழங்கிய இந்த தீர்ப்பில், “சி.பி.ஐ அதிகாரிகள் சாட்சிகளின் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், அத்துடன் தேவையான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. எனவே வழக்கை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. . சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், கார்கள் உள்ளிட்ட பொருள்களைத் திருப்பி வழங்கலாம்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

சேகர் ரெட்டி மீது போடப்பட்ட மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று முடித்து வைக்கப்பட்டது. இப்போது மூன்றாம் வழக்கும் ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”துண்டுச்சீட்டை வைத்து துப்புத் துலக்கும் ஆற்றல் படைத்த சி.பி.ஐ அமைப்புக்கு 170 பேருக்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும், 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும், ஆதாரம் கிடைக்கவில்லை; 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்,

நன்றி : OutLook india

மேலும், “ஒரு வங்கி அதிகாரியைக்கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு ஒரு விசாரணையை நடத்தி, இப்படியொரு சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது என்றால், இந்தப் பரிசை வழங்கியது சி.பி.ஐ என்ற அமைப்பு என்பதைவிட, மத்திய பா.ஜ.க அரசுதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும். முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கமான சேகர் ரெட்டி வழக்கில் மட்டும்தான், `வங்கிகள் கொடுத்த நோட்டுகளுக்கு சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாத’ அதிசயம் நடந்திருக்கும். இதில் வங்கி அதிகாரிகள்மீது வழக்கு போடும் சி.பி.ஐ., ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு போடவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தீர்ப்பு குறித்து நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அலூர் ஷானவாஸ் இந்த தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் அழகிரி சதாசிவம் என்பவர் “சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லை. அத்வானிக்கு எதிராக ஆதாரம் இல்லை. ஹத்ரஸ் வழக்கின் ஆதாரங்கள் எரிந்துவிட்டது. இது தான் இந்தியா” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

சேகர் ரெட்டி மீது போடப்பட்ட மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று முடித்து வைக்கப்பட்டது. இப்போது மூன்றாம் வழக்கும் ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்