Aran Sei

“தேச துரோக வழக்கு போடவா?” என அரசு மிரட்டுகிறது – உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி

Credits Telegraph India

ந்திய ஜனநாயக நாட்டில் ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் விதத்தில் சட்டம் தவறான ரீதியில் கையாளப்படுகிறது என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது.

உச்சநீதி மன்றத்தின் முன்ளாள் நீதிபதி மதன் பி.லோக்கூர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.

”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டாலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த ஜனநாயகத்திலும் இல்லாதவாறு, நீண்ட காலத்துக்கு இணையத்தைத் துண்டித்து அரசு பலமுறை பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தடை செய்துள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர் இழந்த வழக்கில் அரசின் போக்கை விமர்சித்து, “ஹத்ராஸ் சம்பவம் குறித்து ஊடகங்கள் எந்தத் தகவலும் வெளியிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அரசாங்கம் 144 தடை உத்தரவு பிறப்பித்து, சில நூறு காவலர்களைக் கொண்டு மொத்த இடத்தையும் முற்றுகையிட்டு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.” என கூறியிருக்கிறார்.

”இதுபோன்ற அணுகுமுறை மூலம், அரசு சட்டத்தைத் தவறாக பயன்படுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தை மீறுகிறது. கருத்துக்கள் தெரிவிப்பதால் கைதும் நீதிமன்ற விசாரணையுமே மிஞ்சும் எனும்போது, பத்திரிகையாளர்கள் அச்சமின்றி செயல்பட முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேச துரோக வழக்கினை ஆயுதமாகக் கையாண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குகிறதென்றும், இந்த ரீதியிலான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

 

தனிநபர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வது என்பது பேச்சு சுதந்திரத்தை அழிப்பதற்கான மிக மோசமான வழி எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோக்கர் குற்றம் சாட்டியுள்ளதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில், பீமா கோரேகான் வன்முறை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உட்பட 8 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

83 வயதான ஸ்டேன் ஸ்வாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வியாழன் அன்று கைது செய்யப்பட்டு, அக்டோபர் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்