Aran Sei

பாஜகவுடன் இணைகிறதா மதச்சார்பற்ற ஜனதா தளம்? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இருகட்சிகள்

பாரதிய ஜனதா கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம்  இணைக்கப்படலாம் என்ற வதந்தியை, பாஜகவை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும்  முன்னாள் முதல்வருமான எச். டி. குமாரசாமியும் தனித்தனி அறிக்கைகள் வழியாக நிராகரித்துள்ளனர்.

அதேநேரம், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதை அவர்கள் மறுக்கவில்லை.

`கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்

இரண்டு மாதங்களாக நிலவி வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் இணைக்கப்படாலம் என்கிற வதந்திக்கு இடையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பசவராஜ் ஹொரட்டி, நேற்று (டிசம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, இரு கட்சியினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், “எங்கள் தலைவர் குமாரசாமி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாஜகவுடன் தொகுதி பகிர்வு குறித்தும், நாங்கள் ஆளும் அரசில் அங்கம் வகிப்பது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. பேச்சு வார்த்தையின் முடிவுகள் எங்கள் (மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள்) முன் வைக்கும்போது எங்கள் கருத்தைத் தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் மீது தேச துரோக வழக்குகள்: முன்னணியில் கர்நாடகா

“தற்போது, ​​காங்கிரஸ் தினமும் எங்களை தாக்கிக்கொண்டிருக்கும் போது, நாங்கள் என்ன செய்ய முடியும்? எனவே பாஜகவை ஆதரிப்பது இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.” என்று பசவராஜ் ஹொரட்டி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடனான தனது புதிய நெருக்கம் குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது, ​”அரசியலில் எதுவும் நடக்கலாம். எதிர்காலத்தைக் கணிக்க நான் ஜோதிடர் அல்ல.” என்று கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி

கட்சி இணைப்புக் குறித்து, முதலவர் எடியூரப்பாவும் ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கவுன்சில் தலைவர் பிரச்சினையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு வழங்கியது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஏற்கனவே, குமாரசாமி பசு வதை தடுப்பு மசோதாவை ஆதரிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அத்தகைய கட்சி இணைப்பிற்கான சூழல் இப்போது இல்லை. ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்