Aran Sei

ரத்து செய்யப்பட்ட 3 கோடி குடும்ப அட்டைகளும், பட்டினிச் சாவுகளும் – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

image credit : thehindu.com

3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்தது தீவிரமான பிரச்சினை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாருடன் உடல் அடையாளங்கள் மூலம் இணைக்கப்படாததால் 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து கோயிலி தேவி என்பவரின் மனுவில் இதன் மூலம் நாட்டின் பல இடங்களில் பட்டினி சாவுகள் நிகழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி அ. போப்டே தலைமையிலான அமர்வு இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

கோயிலி தேவியின் 11 வயதான மகள் சந்தோஷி குமாரி, 2017-ம் ஆண்டு பட்டினிச் சாவுக்கு பலியானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதார் இணைக்கப்படாததால் தங்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டது என்று கோயிலி தேவி கூறியுள்ளார்.

“பட்டினி சாவுகள் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும், “ரத்து செய்யப்பட்ட குடும்ப அட்டைகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும், “தனது மகளின் இறப்புக்கு நிவாரணம் வேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.

“ஆதார் மற்றும் உடல் அடையாளத்தை வலியுறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் போலி அட்டைகள் என்று மத்திய அரசு சாதாரணமாக சொல்கிறது. இதற்கு உண்மையான காரணம் கண்விழி அடையாளம், விரல் ரேகைகள், ஆதார் இல்லாமல் இருப்பது, கிராமப் பகுதிகளில் இணைய இணைப்பு செயல்பாடாமை ஆகியவைதான். இதனால் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படாமலே அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று மனுதாரர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இந்த மனு பலனடைபவர்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல் 2 முதல் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டது என்று கோயிலி தேவியின் மனுவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வஸ் தி ஹிந்துவிடம் கூறியுள்ளார்.

“பழங்குடி மக்களிடம் ஆதார் அட்டைகள் இருப்பதில்லை, அல்லது அடையாளம் பழங்குடி பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் வேலை செய்வதில்லை. ஆதார் அட்டைகள் வேண்டும் என்ற நிபந்தனையால் 3 கோடி குடும்ப அட்டைகள் போய் விட்டன என்பதை கற்பனை செய்ய முடிகிறதா…” என்று காலின் கான்சால்வஸ் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

“மூன்று கோடி குடும்ப அட்டைகள் போய் விட்டனவா?” என்று தலைமை நீதிபதி போப்டா அதிர்ச்சியுடன் கேட்டுள்ளார்.

“ஆம், பட்டினிச் சாவுகள் நடக்கின்றன. மூன்று கோடி குடும்ப அட்டைகள் போய் விட்டன. இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பை நான் காட்ட முடியும். அது பிரதமரின் ஒரு அறிவிப்பு” என்று திரு கோன்சால்வஸ் பதிலளித்துள்ளார்.

அரசுத் தரப்பில் வாதிட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் அமன் லேக்கி, “குடும்ப அட்டை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு. மனுதாரர் உயர்நீதிமன்றங்களை அணுகியிருக்க வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் அமைப்பை அணுகாமல் மனுதாரர்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று மனுதாரர் கூறுவதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.” என்று தலைமை நீதிபதி போப்டே கூறியுள்ளார். “எந்த ஒரு மாநிலத்திலும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்படவில்லை” என்பதை மனுதாரர் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

உணவு உரிமைக்கான இயக்கத்தின் 2020-க்கான கண்காணிப்பு அறிக்கை, இந்தியாவின் பட்டினி நிலைமையை “மிக மோசமானது” என்று மதிப்பிட்டுள்ளது. உலக பட்டினி குறியீட்டு எண் 2020-ல் இந்தியா 107 நாடுகளில் 94-வது இடத்தில் உள்ளது. இந்தியா “மிக மோசமான பட்டினி பிரிவில்” உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்