Aran Sei

‘பிரதமர் அலுவலகம் தனிச் சிறப்பானது, வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது” : உச்சநீதிமன்றம்

Image Credit : livelaw.in

பிரதமர் மோடியின் வாரணாசித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

மோடி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில் கடந்த புதன் கிழமை அன்று உத்தரவுகள் வழங்குவதற்கு தயாராகி உள்ளது தலைமை நீதிமன்றம்.

நீதிபதிகள் போப்டே, போபண்ணா மற்றும் ராம் சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிமன்ற அமர்வு, “இந்தப் பிரச்சினை நாட்டின் மிக முக்கியமான பிரதமர் அலுவலகம் தொடர்பானது. அதனால் வழக்கை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க முடியாது. முந்தைய வழக்கு விசாரணைகளில், புகார்தாரர் பலமுறை ஒத்தி வைப்பதற்கும், தள்ளி போடுவதற்கும் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் ஏற்கனவே பலமுறை ஒத்தி வைத்துள்ளோம். இது தனிச்சிறப்பான பிரதமர் அலுவலகம் தொடர்பான ஒரு முக்கிய வழக்கு. காலவரையறையின்றி இதனை நிலுவையில் வைத்திருக்க முடியாது.” என நீதிபதி போப்டே கூறியுள்ளார்.

“எனது கட்சிக்காரரான முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான அறிவுப்பு வழங்கியபின் அவருக்கு போதிய கால அவகாசம் தரப்படவில்லை” என்கிறார் வழக்கறிஞர் பிரதீப் குமார்.

இதற்கிடையில், தலைமை நீதிபதி போப்டே இந்த வாதம் உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டதா எனக் கேட்டார்.

மோடிக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “இந்த வாதம் உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல இங்கும் (உச்சநீதிமன்றத்திலும்) இதுவரை முன் வைக்கப்படவில்லை” என்றார்.

கடந்த டிசம்பர் 2019-ல் தேஜ் பகதூரின் வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் தேஜ்பகதூரின் மனுவை தலையீட்டுரிமை (locus standi) அடிப்படையில் தள்ளுபடி செய்ததை எதிர்த்து இந்த சிறப்பு விடுமுறை மனு தாக்கல் செய்யப்பட்டது.

” ….. புகார்தாரர், தான் வழக்கு தொடர விரும்பும் அந்தத் தேர்தலில், ஒரு வாக்காளரோ, வேட்பாளரோ அல்ல. அதனால் அவருக்கு தேர்தல் மனு தாக்கல் செய்யும் தலையீட்டுரிமை இல்லை.” நீதிபதி மோகன் குமாரின் உயர்நீதிமன்ற தனிநபர் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

தேஜ் பகதூர், வாரணாசித் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிட முயன்றார் என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். எனினும் அவரது வேட்புமனுவைப் பரிசீலித்த தேர்தல் அதிகாரி, தேஜ் பகதூர் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து பணிவின்மை காரணமாகவோ அல்லது ஊழல் செய்ததன் காரணமாகவோ பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழை இணைக்கவில்லை எனக்கூறி அதனை நிராகரித்து விட்டார்.

2017-ம் ஆண்டு, இந்திய-பாக். எல்லையில் பணியிலிருக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்குத் தரப்படும் உணவின் தரம் பற்றி குறை கூறி காணொளி ஒன்றை தேஜ் பகதூர் பதிவு செய்திருந்தார். அது சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து அவர் எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் நியமிக்கப்பட்டவராக இல்லாமலும், மேலும் முறையாக நியமிக்கப்ட்டவராகக் கருதக் கூடியவராகவும் இல்லாததால் அவர் தேர்தல் மனுவை தாக்கல் செய்திருக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

“1951, மக்கள் பிரதிநிதித்துவப் சட்டம் பிரிவு 33-ன் படி, ஒருவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையாமல் இருந்தால், அவரது பணி நீக்கம் பணிவின்மை அல்லது ஊழல் ஆகியவற்றுக்காக அல்ல என்பதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யவில்லை எனில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட முறையான தகுதியுடையவராக கருதப்பட மாட்டார்” என்பதை தனது நிராகரிப்புக்குக் காரணமாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாவட்ட தேர்தல் அதிகாரி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 9 மற்றும் 33(3) ல் தரப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தி இருப்பதை உயர்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தேஜ் பகதூர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுமுறைக்கால மனுவில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை எழுதியவர் வழக்கறிஞர் பிரதீப் குமார். பதிவு செய்ததவர் வழக்கறிஞர் சஞ்சீவ் மல்ஹோத்ரா.

“வழக்கின் தகுதிகளை கருத்தில் எடுக்கத் தவறிய வகையில் உயர்நீதிமன்றம் மாபெரும் தவறிழைத்துள்ளது. குடிமை நடைமுறைச் சட்டத்தின், ஆணை VII விதி 11 ன் விதிகளை “வெறும் தொழில்நுட்ப அடிப்படையில்” மட்டும் பார்த்து முடிவெடுத்துள்ளது” என்று அவர்கள் மேலும் வாதிடுகின்றனர்.

தேஜ் பகதூர் இதற்கு முன்பே வாரணாசித் தொகுதி தேர்தல் அதிகாரி தனது வேட்புமனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தலைமை நீதிமன்றத்தை அணுகிய போது, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அந்த மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது‌.

(www.livelaw.in இணைய தளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்