மத்திய அரசு துறைகள் தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதில் அளிப்பதை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதார்களை (உள்துறை இணை அமைச்சர் மற்றும் சிஆர்பிஎப் பொது இயக்குனர்) பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய ரிசர்வ் படையின் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழகத்திலும் புதுச்சேரியிலும், ஒரு தேர்வு மையம் கூட இல்லை. இது தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். குறிப்பாக இன்றைய கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, நான் உள்துறை அமைச்சகத்திற்கும், சிஆர்பிஎப் பொது இயக்குனருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
“இதற்கான கடிதங்களை எதிர் மனுதாரர்களான உள்துறை இணை அமைச்சகத்திற்கும், மூன்றாவது எதிர் மனுதாரரான சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் படை) பொது இயக்குனருக்கும் அனுப்பியிருந்தேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் திருமிகு நித்யானந்த ராய் இடமிருந்து நவம்பர் மாதம் 9-ம் தேதியிட்ட பதில் கடிதம் வந்தது. அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 ன் படி இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, அக்குறிப்பிட்ட மாநிலம் இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத பட்சத்தில், ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இந்தியை அலுவல் மொழியாக ஏற்க இயலாது என்று எப்போதுமே உறுதியாக எதிர்த்து வந்துள்ள மாநிலம் ஆகும்” என்று சு.வெங்கடேசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆகவே இந்தியை ஏற்று ஆங்கிலத்தை தொடர்வதில்லை என்று முடிவு செய்யாத நிலையில் மாநிலங்களுக்கான தகவல் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் என்பதே சட்டபூர்வமானது” என்று நாடாளுமன்ற மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.