100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெரும்பாலான கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று லிப்டெக் இந்தியாவின் (Liberation Technology India) ஆய்வு கூறியுள்ளது.
ஆய்வின்படி, இவர்கள் பல முறை வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனால், பயணச் செலவும் வருமான இழப்பும் உருவாகின்றது. மின்னணு வருகை பதிவில் பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி இவர்களின் ஊதியங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, ஜார்கண்டில் ஒரு வாரக் கடின உழைப்பைச் செலுத்திய ஒரு தொழிலாளிக்கு ரூ.1,026 ஊதியத்தை அரசு நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். அதில், கிட்டத்தட்ட 40% தொழிலாளர்கள் தங்கள் பணத்தைப் பெற வங்கி கிளைக்குப் பல பயணங்களை மேற்கொள்ள செலவிட வேண்டும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு முறை பயணத்தை மேற்கொள்ள அவர்களுக்கு ரூ.53 செலவாகிறது. வங்கிக் கிளைகள் அவர்களின் கிராமத்திலிருந்து குறிப்பிடத் தக்க தூரத்தில் அமைந்திருக்கின்றது. இதனால் பயணத்தின்போது, ஏற்படும் நேர விரயம் காரணமாகவும் அவர்கள் ஒரு நாள் வேலையை இழக்க நேர்கிறது.
பயணத்திலும், ஒரு நாள் ஊதிய இழப்பாலும், உணவுக்காகவும் சுமார் ரூ.392 செலவாகிறது. ஆகையால், நூறு நாள் வேலைத் திட்டத்தில் உழைத்ததற்கான ஊதியத்தைப் பெற அவர்கள் அதில் மூன்றில் ஒரு பகுதியை இழக்கிறார்கள்.
“சாதாரணமாகவே, தொழிலாளிகளுக்குத் தங்கள் ஊதியத்தைச் சரியான நேரத்தில் பெறுவது கடினமாக உள்ளது. கொரோனா தொற்றின்போது, போக்குவரத்து குறைந்துள்ளதாலும் கிராமப்புற வங்கிகளில் பொது இடைவெளியைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது” என்று லிப்டெக் ஆராய்ச்சியாளர் சகினா தோராஜிவாலா தி இந்துவிடம் கூறியுள்ளார்.
2018-19-ம் ஆண்டு, ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், சுமார் 2,000 தொழிலாளர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மானியம் வழங்கியுள்ளது.
“நாங்கள் கணக்கெடுப்பு நடத்தியதற்கு பிறகான இரண்டு ஆண்டுகளில், கிராமப்புற தனிநபர் வங்கிக் கிளை எண்ணிக்கையில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது, பிரச்சனைகளுக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. 20 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரு வங்கி கிளை மட்டுமே உள்ளது” என்று சகினா தோராஜிவாலா தெரிவித்துள்ளார்.
10 தொழிலாளர்களில் ஒருவருக்கு மட்டுமே அவர்களின் ஊதியம் வங்கியில் செலுத்தப்பட்டவுடன் குறும் செய்தி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் ஊதியம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதை என்பதைக் கண்டறிய வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊதியம் வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டதாகச் செய்தி வந்தாலும் வாங்கி கணக்கில் பணம் இருப்பதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.
ஜார்க்கண்டில் 42% பேரும், ராஜஸ்தானில் 38% பேரும் தங்கள் ஊதியத்தை பெற நான்கு மணி நேரத்திற்கும் மேல் செலவிடுகிறார்கள். ஆந்திர மாநில தொழிலாளர்களில் 2% மட்டுமே இவ்வளவு நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்கிறார்கள். 45% தொழிலாளர்கள் ஊதியத்தை பெற பல முறை வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த நாளிற்கான ஊதிய இழப்பைக் கணக்கில் கொள்ளாவிட்டாலும், சராசரியாக ஒரு பயணத்தை மேற்கொள்ள இவர்களுக்கு ரூ.31 செலவாகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊதியத்தை பெறுவதற்கான ஐந்து பரிவர்த்தனைகளில் ஒரு பரிவர்த்தனையாவது மின்னணு வருகை பதிவில் ஏற்படும் பிரச்னை காரணமாகத் தோல்வி அடைகிறது என்று 40% தொழிலாளிகள் கூறியுள்ளனர். 7% தொழிலாளிகள் இதன் காரணமாக ஐந்து பரிவர்த்தனைகளுமே தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார், ரூ.4,639 கோடி ஊதியம் வழங்காமல் நிராகரிக்கப்பட்டது என்றும், சுமார் ரூ.1,236 கோடி நிலுவையில் உள்ளது என்றும் அரசு தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
“கொரோனா தொற்று காலகட்டத்தில் அனைவர்க்கும் வேலையின் தேவை ஏற்பட்டுள்ளது. பல முறை ஊதியம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆகையால், வேலைகளிலிருந்து வெளியேறுகிறார்கள். சம்பளம் பெற முடியாவிட்டால் அவர்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என்று சகினா தோராஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.