Aran Sei

ஐசியூவில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 15 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

Image Credits: Legal Bites

கவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் நடைமுறைக்கு வந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து தலைமையில்லாமல் இருக்கும் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உட்பட பெரும்பாலான கமிஷன்களில் ஆட்குறைக்கப்பட்டள்ளதால் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளது.

சதார்க் நாக்ரிக் சங்கதன், ஈக்விட்டி ஸ்டடீஸ் சென்டர் ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான, அதாவது 59,000 க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன, அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தில்  47,923 வழககுகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் தலைமை தகவல் ஆணையத்தில் 35,653 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய வேகத்தில் செயல்பட்டால், நிலுவையில் உள்ள அனைத்து புகார்களையும் தீர்ப்பதற்கு ஒடிசா ஆணையத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும் என்பதும், அதே நேரத்தில் தலைமை தகவல் ஆணையத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதும் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அறிக்கையின்படி, ஒடிசா நான்கு ஆணையர்களுடன் செயல்படுகிறது, ராஜஸ்தானில் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஜார்க்கண்ட் மற்றும் திரிபுராவில் ஆணையர்கள் இல்லாமல் பல மாதங்களாகச் செயல்படாமல் இருக்கின்றன. தலைமை தகவல் ஆணையம் தலைவர் இல்லாமல் 5 ஆணையர்களுடன் இயங்கிவருகிறது.

சட்டப்படி, ஒவ்வொரு ஆணையத்துக்கும் ஒரு தலைவர் மற்றும் 10 ஆணையர்கள் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறியதற்காக அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு தண்டனையையும் பெறுவதில்லை என்றும் இந்த பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் 16 ஆணையங்களிலிருந்து தரவைப் பகுப்பாய்வு செய்தபோது, ​​தீர்ப்பளிக்கப்பட்ட 2.2% வழக்குகளில் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. இருப்பினும், முந்தைய பகுப்பாய்வின்படி 59% விதிமீறல்களில் அபராதம் விதித்திருக்க வேண்டும்.

“தகுதியான வழக்குகளிலும் ஆணையம் அபராதம் விதிக்காதது, சட்டத்தை மீறுவது எந்தவொரு கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தாது எனும் ஒரு தவறான சமிக்ஞையை பொது அதிகாரிகளுக்கு தருகிறது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்டமைக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையை அழிக்கிறது மற்றும் தண்டனையற்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது,” என்று இந்த அறிக்கை கூறுகின்றது.

ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2020 வரை 16 ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 90,000 வழக்குகளில், 15,700 க்கும் மேற்பட்ட வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது, மேலும் 1,995 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் 9,000 க்கும் மேற்பட்ட நேரில் ஆஜராகும் நோட்டீஸ்களைக் கொண்டிருந்தது, ஆனால் 163 அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, விதிக்கப்பட்ட அபராதம் ரூ.2.53 கோடி ஆகும்.

“கொரோனா தொற்றால் நாட்டில் எதிர்பார்க்காதவாறு ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தகவல் ஆணையத்தின் செயல்பாட்டை இப்போது ஆராய்வதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது,” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

நோயின் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்கு பின்னர், பொதுப் பணத்தின் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் நலத்திட்டங்கள், திடீரென வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை இழந்த கோடி கணக்கானவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொது சுகாதார அவசரநிலையால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், அரசாங்க திட்டங்களை பெறுவதாக இருந்தால், அவர்களுக்குப் பொருத்தமான தகவல்கள் சென்று அடைய வேண்டும்” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

“இரகசியத்திற்கான ஊக்குவிப்புகள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மற்றும் விவேகமான செயல்களுக்கான நோக்கம் பரந்தஅளவில் இருக்கும் ஒரு நேரத்தில், சுகாதார வசதிகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது பற்றிய தகவல்களை மக்கள் பெறுவதை உறுதிப்படுத்த, தகவல் ஆணையங்களின் பங்கு முக்கியமானது,” என்று அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

(‘தி இந்து’ -வில் வெளியான கட்டுரை)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்