Aran Sei

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

பாஜகவின் கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா (2017ல்) Photo Credit : Indian Express

னுதர்மத்தில் இருந்து  தலித் விரோத மற்றும் பெண்கள் விரோத கருத்துகள் உள்ள பகுதிகளை அகற்ற வேண்டும் என்று சன்ஸ்கார் பாரதி என்ற இந்து பண்பாட்டு அமைப்பு கூறியிருக்கிறது.

சன்ஸ்கார் பாரதி என்ற ஆர்.எஸ்.எஸ்-ஸின் பண்பாட்டு அமைப்பின் இணைச் செயலாளர் அமீர் சந்த், “மனுஸ்மிருதியிலிருந்து  தலித் விரோத மற்றும் பெண்கள் விரோதமான கருத்துகள் உள்ள பகுதிகளை அகற்றுவது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்” என்று கூறியதாக ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ தளம் 2017, மே 14-ம் தேதி செய்தி வெளியிட்டிருக்கிறது.

“சனாதன தர்மம் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது? பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தைகளாகப் படைக்கப்பட்டவர்கள். All women are prostitutes as per manu dharma. எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.“ என்று மனுதர்மம் கூறுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகியது.

இது தொடர்பாக, இந்துத்துவவாதிகளும் இந்து அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

“மனுதர்மம் பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது எனும் அர்த்தத்தில் நான் பேசியதை தவறாக பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற சாதிவெறிபிடித்த, மதவெறிபிடித்த கும்பல் திட்டமிட்டு எனக்கெதிரான பொய்ப் பரப்புரைகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள்“ என்று இந்தப் பிரச்சனை குறித்து பதிலளித்தார் திருமாவளவன்.

இதைத் தொடர்ந்து, மனுதர்மத்தை தடை செய்யக் கோரி  தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தமன் ஒரு ஆன்லைன் புகாரை அளித்தார். இது குறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவலர்களுக்கு ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார் என்று ‘நியூஸ் மினிட்’ செய்தி குறிப்பிடுகிறது.

இதையடுத்து கலகம் விளைவிக்கும் கருத்தை வெளியிடுதல், மதம், இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் சொற்களை பயன்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு,  திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

திருமாவளவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மதிமுக வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி , மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி , நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் மனுதருமத்தைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்-ன் பண்பாட்டு அமைப்பே விமர்சனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“மனுஸ்மிருதியில் சில இடங்களில் பிரச்சனைக்குறிய கருத்துகள் உள்ளன. அதை நீக்க வேண்டும். நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மனுஸ்மிருதியைப் பாக்க வேண்டும். இதை கவனிக்குமாறு நாங்கள் மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு பரிந்துரைப்போம்.” என்று கூறியிருந்தார் சன்ஸ்கார் பாரதியின் இணை செயலாளர் அமீர் சந்த்.

மேலும் “மனு 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பிறந்த பின், இந்த 5,500 ஆண்டுகளில் மனுஸ்மிருதியில் பல பதிப்புகள் எழுதப்பட்டுள்ளன. அதனால் அந்த பதிப்புகளை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறியதாக ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பெண்களை பற்றி தவறாக பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக நாளை (அக்டோபர் 27) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடைப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்