Aran Sei

” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்

போராடும் விவசாயிகள் - Image Credit : India Today

போராடும் விவசாயிகளை டெல்லி எல்லையிலிருந்து நீக்கக் கோரும் பொதுநல மனுவின் மீது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டிருக்கிறது.

” உச்சநீதிமன்ற கருத்து தார்மீக வெற்றி ” – போராடும் விவசாயிகள்

மாறாக, விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது. இந்த வழக்கு விசாரணை விடுமுறைக் கால அமர்வில் தொடர்ந்து நடக்கும்.

இது தொடர்பாக, இரு தரப்பையும் கேட்டு முடிவு எடுப்பதற்காக ஒரு பாரபட்சமற்ற, சுயேச்சையான கமிட்டியை அமைக்கவிருப்பதாக உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. அதுவரையில் அமைதிவழி போராட்டம் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.

இந்தக் கமிட்டியில், ஊடகவியலாளர் பி சாய்நாத் போன்ற விவசாயத் துறை நிபுணர்கள், மற்றும் பாரதிய கிசான் யூனியன் போன்ற விவசாய சங்கங்கள் பங்கேற்கலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

“கமிட்டியின் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது வரையில் உயிருக்கோ, சொத்துக்களுக்கோ சேதம் இல்லாமல் போராட்டம் தொடரும். அரசும் போலீஸ் மூலமாக வன்முறையை தூண்டி விடக் கூடாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

“போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். அதை சமன் செய்வது பற்றியோ, அல்லது கட்டுப்படுத்துவது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் அது யாருடைய உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

22 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

“ஆனால், ஆண்டுக் கணக்கில் போராட்டத்தைத் தொடர முடியாது. விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதற்கு நாங்கள் வழி ஏற்படுத்துவோம்” என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

ஒன்றிய அரசு சார்பாக தலைமை அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், மனுதாரர்கள் சார்பாக ஹரீஷ் சால்வே மற்றும் ஓபி பரிஹாரும் வாதிட்டார்கள். பஞ்சாப் அரசின் சார்பாக ப சிதம்பரம் வாதிட்டார். விவசாயிகளை சார்பாக வினீத் பாரிக், பிரஷாந்த் பூஷண் காலின் கோன்சால்வஸ், துஷ்யந்த் தாவே ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்தனர்.

பாரதிய கிசான் யூனியன் (தோவபா)-வைச் சேர்ந்த எம்எஸ் ராய், இது தொடர்பாக விவசாய சங்கங்களுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. “நோட்டீஸ் வந்த பிறகு, நாங்கள் விவாதித்து ஒரு முடிவெடுப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்திடமிருந்து எந்த நோட்டீசும் வரவில்லை என்று போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒரு பத்திரிகை செய்தியில் உறுதி செய்துள்ளது. இந்த விஷயத்தை மூத்த வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷண் காலின் கோன்சால்வஸ், துஷ்யந்த் தாவே, எச்எஸ் பூல்கா ஆகியோருடன் விவாதிக்கவுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

“விவசாய சங்கங்களுக்கு எங்களது சேவையை கட்டணமின்றி வழங்க நாங்கள் முன் வந்துள்ளோம்” என்று வழக்கறிஞர் எச்எஸ் பூல்கா உறுதி செய்துள்ளார்.

வியாழக்கிழமை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் போராடும் விவசாயிகளை டெல்லி எல்லையில் இருந்து நீக்குமாறு கோரும் மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. இது போன்ற மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதி பட்டேல் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்