போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோபமடைந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ரிலையன்ஸ் ஜியோவின் தொலைதொடர்பு கோபுரங்களை சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து, அந்நிறுவனம் தனது சொத்துக்கள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் அரசு தலையிடக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சமீபத்தில், இரு மாநிலங்களிலும் சுமார் 2,000 ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மொபைல் கோபுரங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கோபுரங்களில் பெரும்பாலானவை, பதிந்தா, மான்சா, நவான்ஷர், தரன் தரன், பதாலா, ஜலந்தர், அம்ரித்சர், ஹோஷியார்பூர், ஃபெரோஸ்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ளன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், 2,000 கோபுரங்களும், பல அலைவாங்கும் நிலையங்களும், கண்ணாடி இழை கம்பிகளும் (fiber optic cables) சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜியோ கூறினாலும், பெரும்பாலான நிகழ்வுகளில் கோபுரங்களுக்கு சேதம் மிகக் குறைவாகவே ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 4) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்ஐஎல்), தன் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வழியாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அரசு உடனடியாக தலையிட்டு, சட்டவிரோதமாக குற்றவாளிகளால் செய்யப்பட்ட இந்த வன்முறையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளதாக ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த வன்முறைச் செயல்களின் வழியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இரு மாநிலங்களிலும் எங்கள் துணை நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு, விற்பனை மற்றும் சேவை நிலையங்களுக்கு சேதத்தையும் இடையூற்றையும் ஏற்படுத்தியுள்ளன. காழ்ப்புணர்ச்சியுடன் இது போல வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள், எங்களுடைய வணிக போட்டியாளர்களாலும் தூண்டப்பட்டு இதில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளது
ஜியோ கோபுரங்கள் பாதிப்பு – பதறும் ரிலையன்ஸ், பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்
இந்த விவசாயிகள் போராட்டத்தை, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அவதூறையும் இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை செய்ய சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் ஒப்பந்த முறை விவசாயத்தில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதால், இந்த விவசாய சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் போன்ற எங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கீழ் இயங்கும் எந்த நிறுவனமும், கடந்த காலங்களில் எந்தவொரு கார்ப்பரேட் அல்லது ஒப்பந்த முறையிலான விவசாயத்தையும் செய்யவில்லை. மேலும் அதில் நுழைய எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை.” என்றும் இந்த நோக்கத்தை மனதில் கொண்டுதான் பஞ்சாப், ஹரியானாவில் எந்தவொரு நிலத்தையும் வாங்க மறுத்தோம் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.