Aran Sei

அரசியல் கைதிகளை விடுதலை செய் : டெல்லி விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என டெல்லியில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து விவசாயச் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்காக சில தினங்களுக்கு முன், போராட்டத்தை நிறுத்தச் சொல்லி ஒரு திட்ட வரைவை விவசாயிகளுக்குக் கொடுத்தது. கொடுக்கப்பட்ட திட்ட வரைவில், விவசாயிகளின் கோரிக்கைகள் என்னவாக இருக்கின்றன, அது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என விவரிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்ட வரைவு விவசாயிகளை அவமதிப்பதாக இருக்கிறது என அதை ஏற்க மறுத்த விவசாயிகள், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர்.

திட்ட வரைவை நிராகரித்ததற்கு மறுநாள், மனித உரிமை நாளை முன்னிட்டுப் போராட்டக் களத்தில் இருக்கும் சங்கங்களிலேயே பெரிய சங்கமான பாரதிய கிசான் சங்கம், சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறது. திக்ரி எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் பாரதிய கிசான் சங்கம், பிற ஜனநாயக இயக்கங்களுக்கும், மனித உரிமை இயக்கங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது என தி வயர் தளம் தெரிவிக்கிறது.

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

இது குறித்து தி வயரிடம் (The Wire) பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ஜோகிந்தர் உக்ரஹன், “ கௌதம் நவ்லாகா அல்லது சுதா பரத்வாஜ் போன்றோர் எல்லாம் என்ன தவறு செய்தனர்? பின் தங்கிய மக்களை அரசு எப்படி மோசமாக நடத்துகிறது என்பதைத்தான் அவர்கள் காட்டினார்கள். காஷ்மீரில் பாதுகாப்பு படைகளுக்குப் பயந்து மக்கள் வாழ்வதைச் சிலர் காண்பித்தனர். அவர்களை எல்லாம் அமைதியாக்க மோடி அரசு சிறையில் அடைத்தது. இவர்களுக்காகப் பேச வேண்டியது எங்கள் கடமை. மக்களைச் சுரண்டும் அரசர் போன்ற ஒரு பிரதமரை எதிர்த்துதான் நாம் போராடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் மீது வழக்கு – அடிப்படை உரிமையை வழங்குங்கள் – உச்சநீதி மன்றம்

மனித உரிமை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். மேடை நாடகங்கள், பாடல்கள் என விவசாயிகள் போராட்டம் பல வடிவம் எடுத்தது. இந்த நிகழ்வில், பொருளாதார நிபுணர் நவ்ஷரன் கௌர், கல்வியாளர் – செயற்பாட்டாளர் நந்தினி சுந்தர், மக்கள் இயக்கத்தினரான தேசியக் கூட்டணியின் விமல் பாய், எழுத்தாளர் கேவல் தாலிவால், ஓய்வு பெற்ற விஞ்ஞானி மஹாவிர் நர்வல் ஆகியோர் பங்கேற்றனர். இதில், நர்வலின் மகள் நடாஷா நர்வல், பிஞ்ச்ரா தாட் எனும் பெண்ணிய குழுவின் நிறுவனர், டெல்லிக் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் இருக்கிறார்.

மத்திய அரசின் புது விவசாயச் சட்டங்கள் குறித்து, “அரசு நிலச் சட்டங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு எதிராகவே பயன்படுத்துகிறது. எந்த அச்சமும் இல்லாமல் அனைத்து விதிகளையும் மீறிக்கொண்டிருக்கும் பணக்காரர்களுக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பயன்படுத்துவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்