Aran Sei

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – நடிகை ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன்

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அவருடன் சேர்ந்து, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா மற்றும் அவர் வீட்டு வேலையாள் திபேஷ் சாவாந்திற்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக, ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக், சாமுவேல் மிராண்டா மற்றும் திபேஷ் சாவாந் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

செப்டம்பர் 6-ம் தேதி ரியா முதல்முறையாக விசாரணைக்கு ஆஜரானார். அன்று பல மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களும் அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்த விசாரணை நடத்தினர்.

மூன்று நாள் நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 9-ம் தேதி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

ரியா கைது நடவடிக்கைக்கு பாலிவுட் நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“பிறர் துன்பத்தை பார்த்து ரசித்தும் பொய்களை பரப்பிவருபவர்களை ஆதரித்தும் வருபவர்களுக்காக வருந்துகிறேன். உண்மை வெளிவரும் தினம் உங்களை நினைத்து நீங்களே வெட்கப்படுவீர்கள்” என ரியா கைது குறித்து இயக்குனர் அனுராக் கஷ்யப் டிவிட்டரில் பதிவிட்டார்.

நடிகை வித்யா பாலன் “ரியாவை இழிவுபடுத்துவதை பார்க்கும்போது இதயம் கனக்கிறது” என என்டிடிவியிடம் தெரிவித்தார்.

Credit: Economic Times

நடிகை டப்ஸி தனது ட்விட்டரில் ”குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே வாழ்வதற்கான உரிமையை பறித்துள்ளார்கள். இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பதில் கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் மரணத்தில் ரியா சக்ரவர்த்தி பலிகடாவாக்கப்படுவதாகவும், சுஷாந்த் சிங் மட்டுமன்றி வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

Credit: New Indian Express

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை அல்ல; தற்கொலை என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை மறு பரிசீலனை செய்த எய்ம்ஸ் குழுவின் தலைவரான மருத்துவர் சுதிர் குப்தா தெரிவித்தார்.

“மும்பை எஃப்எஸ்எல் மற்றும் எய்ம்ஸ் ஆய்வகத்தால் எந்தவொரு போதை பொருள் சுவடு இருப்பதையும் கண்டறிய முடியவில்லை. முழுமையான பரிசோதனையின்போது கழுத்தில் வெட்டப்பட்ட அடையாளம், தூக்குக் கயிறால் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்கு ஒத்ததாக இருந்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ரியா சக்ரவர்த்தியை 1 லட்ச ரூபாய் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயை ஜாமீன் தொகையை விதித்துள்ளது.

இவர்களுடன் சேர்ந்து ஜாமீன் கோரிய ரியா சக்ரவர்த்தியின் சகோதர ஷோவிக், போதைப்பொருள் விற்பானை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அப்டேல் பரிஹர் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சுஷாந்த் சிங் மரணத்தில், ஹவாலா பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ரியாவின் வாட்ஸ் ஆப் செய்திகளை பரிமாரியதன் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா மீது வழக்கு தெடர்ந்தது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது குறித்து சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்