Aran Sei

‘இடைநீக்கம் செய்துவிட்டு மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள்’: டெரிக் ஓ பிரையன்

credits:nationalheraldindia

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணாவிரதம் அறிவித்திருந்தார்.

விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யும்போது அத்துமீறி நடந்துகொண்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உட்பட 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்தார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் நடந்துகொண்ட விதம் மிகவும் வேதனையளித்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும் ஹரிவன்ஸ் தெரிவித்திருந்தார்.

இடைநீக்கத்தை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்களும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று காலை ஹரிவன்ஸ் அவர்களை சந்தித்து சமாதானம் கூறும் விதமாக தேநீர் கொடுத்தார். எம்.பி.க்கள் அதை வாங்க மறுத்தனர்.

நல்லெண்ண அடிப்படையில் தேநீர் கொடுத்ததாக எடுத்துக் கொண்டாலும், ஹரிவன்ஸ் சிங்கின் செயல் மிகவும் தவறானது எனவும் வேளாண் மசோதா தாக்கலின்போது அவை விதிகள் மீறப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஹரிவன்ஸ் சிங்கிடம் கூறினர்.

பிரதமர் நரேந்திர மோடி, “தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தாமே முன்வந்து தேநீர் கொடுத்திருப்பது ஹரிவன்ஸ் சிங்கின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவருடைய செயல் பாராட்டுக்குரியது“ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “நூற்றாண்டு காலமாக பீகார் மாநிலம் ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு சான்றாக இருந்துவருகிறது. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸின் போற்றுதலுக்குரிய நடத்தை, ஜனநாயத்தை விரும்புவோரை பெருமை கொள்ளச்செய்யும்.” எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி டெரிக் ஓ பிரையன் ட்விட்டரில், “மாநிலங்களவையில் 3.5 மணிநேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு மசோதாக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதோடு, அத்தியாவசிய பொருட்கள் மசோதா தேர்வு குழுவுக்கு பரிந்துரை செய்தும், வங்கி ஒழுங்குமுறை மசோதாவில் திருத்தங்களும் தெரிவித்திருந்தேன். அனைத்தும் நிராகரிப்பட்டள்ளன. எங்களை இடைநீக்கம் செய்துவிட்டு மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்“ என குற்றம் சாட்டியுள்ளார்.

பூஜ்ஜிய நேரத்துக்கு பிறகு பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சிகள் அவையைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு புறக்கணிப்பு குறித்த முடிவினை மறுபரிசீலனை செய்து அவை நடவடிக்கையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அவையிலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் “விவசாயிகளை காப்போம்”, ”ஜனநாயத்தை காப்போம்”, ”தொழிலாளர்களை காப்போம்” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் தாங்கி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

விவசாய மசோதாக்கள் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை 5 மணிக்கு அவருடைய அலுவலகத்தில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்