Aran Sei

குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம் – ராஜஸ்தான் அரசு புதிய சட்ட திருத்தம்

ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், ராஜஸ்தான் திருமணப் பதிவு கட்டாயம் (சட்டத்திருத்தம்) 2021 என்ற பெயரில் இந்த புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு கட்டாயம் என்று மாற்றப்பட்டிருக்கும் புதிய சட்டத்திருத்தத்தில், குழந்தை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி வெளிநடப்பு செய்துள்ளனர்.

21 வயது பூர்த்தியடையாத மணமகனுக்கும், 18 வயது பூர்த்தியடையாத மணமகளுக்கும் இடையில் நடைபெறும் திருமணத்தை 30 நாட்களுக்குள் மணமக்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பதிவு செய்யலாம் என சட்டத்திருத்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வது கட்டாயம் என்று 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சாந்தி குமார் தாரிவால், “இந்தச் சட்டத்திருத்தம் குழந்தை திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. திருமணம் நடைபெற்றால் அதை பதிவு செய்வதை தான் கட்டாயம் ஆக்கியுள்ளது. இதன் மூலம் குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று அர்த்தமல்ல. ஒரு மைனருக்கு திருமணம் நடக்கும் பட்டத்தில், அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்யும் உரிமை அவருக்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் விரும்பினால், குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்திருத்த ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராக இல்லை எனக்கூறிய அமைச்சர் தாரிவால், ”அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால் குழந்தை திருமணமும், இதில் இணைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் குலாம் சந்த் கட்டாரியா, “இந்தச் சட்டம் முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன். தற்போது நடைமுறையில் உள்ள குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் 8வது பிரிவு மீறும் வகையில் புதிய சட்டத்திருத்தம் உள்ளது. இதைச் சட்டமியற்றியவர்கள் யாரும் கவனிக்கவில்லை” என கூறியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த ராம் லால் சர்மா, “குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றால், அதைப் பதிவு செய்ய எப்படி சட்டதிருத்தம் கொண்டுவர முடியும். காங்கிரஸ் கட்சி இதை வாக்கு வங்கி அரசியலுக்காக செய்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ராத்தோட், “ராஜஸ்தானில் இதுப் போன்று நடைபெற்றுள்ளது என நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இங்குக் குழந்தை திருமணம் பிற்போக்கான செயலாக பார்க்கப்பட்டது. இதனால், 1927 ஆம் ஆண்டு சர்தா சட்டம் (குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம்) கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்தது. பின்னர் இது 2006 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணம் ஒழிப்புச் சட்டத்தால் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கையைப் பார்க்கும்போது ராஜஸ்தானில் இன்னும் இந்த பிற்போக்கு நடைமுறை உள்ளது என்பது தெரியவருகிறது” என தெரிவித்துள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்