Aran Sei

ராஜஸ்தான்: ‘காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டம்’

Image Credits: The Indian Express

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நான்கு மாதங்களுக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தற்போது, அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ‘ரகசிய சந்திப்புகளை’ நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அசோக் கெஹ்லோட், சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஷியோகஞ்ச் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தைக் காணொளி வழியாக திறந்து வைத்து உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், “நமது எம்எல்ஏக்கள் அமித் ஷா மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்தனர். அதன் பின்னர், அமித் ஷா உள்துறை அமைச்சராக இருப்பது வெட்கத்துக்குரியது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஒரு காலத்தில் சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் உள்துறை அமைச்சராக இருந்தனர், இப்போது இவர் எல்லாம் உள்துறை அமைச்சராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

“இது வரை ஐந்து வெவ்வேறு அரசுகளை கவிழ்த்துவிட்டோம் ராஜஸ்தான் ஆறாவதாக இருக்கும்’ என்று பாஜக தலைவர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உறுதி அளித்து வருவதாக அசோக் கெஹ்லோட் தெரிவித்துள்ளார். “பாஜக இது போன்று சதி செய்து நியாயமற்று செயல்படுகிறது. ஏனெனில், அது அதிகாரத்திற்கான பேராசையால் கண்மூடித்தனமாக இருக்கிறது”என்று அசோக் கெஹ்லோட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையிலான 19 எம்எல்ஏக்கள் அடங்கிய குழு, ஆட்சிக்கான ஆதரவை மறுக்கப்போவதாக அச்சுறுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் அசோக் கெஹ்லோடின் அரசு கவிழவிருந்தது. இதற்குப் பாஜகதான் காரணம் என்று அப்போது அவர் கூறினார். பாஜக அவரது அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நோக்கோடு செயல்படுவதாக ராஜஸ்தான்  முதல்வர் அசோக் கெஹ்லோட் குற்றம் சாட்டினார்.

பெரும் குழப்பங்களுக்குப் பிறகு, அசோக் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை தீர்மானத்தை வென்றது. தங்களது குறைகளைக் கேட்கவும் நிவர்த்தி செய்யவும் ஒரு குழுவை நியமிப்பதாக உயர்மட்டத் தலைவர்கள் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து வெளியேறுவதாகக் கூறிய எம்எல்ஏக்களும் கட்சிக்குத் திரும்பினர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்