Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்

credits : outlook

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மறுக்கும் வகையில் மூன்று மசோதாக்கள் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மாநில சட்டப் பேரவையில் மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப் ஆகிய கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் அவையில் விவாதத்தில் பங்கேற்றதுடன், மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மசோதாக்கள் எதிர்ப்பின்றிப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப்பை தொடர்ந்து காங்கிரஸ் ஆளக்கூடிய மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வேளாண் சட்டங்களை மறுக்கும் வகையில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் மூன்று மசோதாக்களை  சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அவை அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விளைநிலத்தில் வேலை செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் விலை உத்தரவாத மசோதா 2020, விவசாயிகளின் உற்பத்தி மூலம் நடக்கும் வர்த்தக மசோதா 2020 ஆகியனவாகும்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார் ஷாந்தி தரிவால். மக்களுக்கு எதிரான இந்த வேளாண் சட்டங்களை எதிர்கொள்வதில் நாங்கள் பஞ்சாப்பின் வழியைப் பின்தொடர்வதாகக் கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெலாட் “திருமதி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்த மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் தொடர்ந்து எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் ”பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு இதற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. விரைவில் ராஜஸ்தானும் அதை நிறைவேற்றும்” எனக் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்