Aran Sei

சீன ராணுவம் எப்போது இந்திய நாட்டை விட்டு வெளியேறும்? ராகுல் காந்தி கேள்வி

Credits Congress Twitter

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகச் சொந்தத் தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்குச் சென்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இன்று பங்கேற்றுள்ளார்.

“என்னுடைய தொகுதியில் கொரோனா பணிகளை ஆய்வு செய்தேன். மத்திய மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொண்டிருக்கும் நேரம், கொரோனா மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.”

“இந்தச் சண்டை முடிவுக்கு வந்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.” என ட்விட்டரில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ள மூன்று விவசாயச் சட்டங்கள் குறித்து, “இவை மிகவும் ஆபத்தான சட்டங்கள். நம்முடைய உணவுப் பாதுகாப்பை பாதிப்புக்குள்ளாக்குவதோடு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும்.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

சீன ராணுவம் எப்போது இந்திய நாட்டை விட்டு வெளியேறும் எனப் பிரதமர் மோடியிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

“நிர்வாகத்தின் தோல்வியாலும் அவரது இயலாமையாலும், அந்நிய நாட்டினர் இந்தியாவில் 122 சதுர கிலோ மீட்டர் அளவு கைப்பற்றியுள்ளனர் என்பதை பிரதமர் மோடியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.” எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

 

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பேசியபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியைத் தவறாகப் பேசியிருந்தார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ராகுல் காந்தி, “கமல்நாத் என்னுடைய கட்சியில் இருப்பவர் என்றாலும் தனிப்பட்ட முறையில் அவருடைய சொற்பிரயோகம் எனக்குப் பிடிக்கவில்லை.”

”அவர் யாராக இருந்தபோதிலும், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி அவர் பேசியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மலப்புரம் மாவட்டம் கவலப்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோரையும் வீட்டையும் இழந்த சகோதரிகளை ராகுல் காந்தி சந்தித்தார்.

விபத்து நேர்ந்த சமயம் விடுதியில் தங்கிப் படித்து வந்த சகோதரிகளைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்குப் புது வீடு கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி இன்று சகோதரிகளைச் சந்தித்து புது வீட்டுக்கான சாவியை ராகுல் காந்தி அளித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்