Aran Sei

’என்னை யாராலும் தடுக்க முடியாது’: மீண்டும் ஹத்ராஸ் சென்ற ராகுல்

கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட சாதியை 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 29-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்நிலையில், தங்கள் விருப்பத்தை மீறி, இறுதிச் சடங்கிற்கு கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக காவல்துறையினர் உடலை தகனம் செய்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஹத்ராசில் நடந்த இந்த நிகழ்வு நாடுமுழுவதும் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஹத்ராஸ் சென்ற போது யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கே போலீசார் தள்ளிவிட்டதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களை காவலர்கள் கைது செய்து சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 200 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கவுதம் புத்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

”துயரத்தில் ஆழ்ந்துள்ள ஹத்ராஸ் குடும்பத்தைச் சந்தித்து அவர்கள் வேதனையை பகிர்ந்துகொள்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என அவர் கூறியிருந்தார்.

இன்று மதியம் சுமார் 3 மணியளவில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிக்காக, எங்கள் மகள்களுக்காக அறவழியில் நாங்கள் போராடுவதை எவராலும் தடுக்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பிரியங்கா காரை இயக்க, ராகுல்காந்தி அவருடன் அமர்ந்து செல்லும் வீடியோவும் பதிவிடப்பட்டிருந்தது.

 

ராகுல் காந்தி வர இருப்பதை தொடர்ந்து, டெல்லி – நொய்டா நெடுஞ்சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த உத்தரபிரதேச மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ராகுல் காந்தி, பிரியங்கா வதேராவுடன் சேர்த்து ஐந்துபேர் மட்டும் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அதேபோல் ராகுல், பிரியங்காவுடன் மேலும் மூன்று பேர் மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். மரணமடைந்த பெண்ணின் தாயை கட்டியணைத்த பிரியங்கா “இந்த நெருக்கடியான காலத்தில், காங்கிரஸ் கட்சி என்றும் உங்களுடன் இருக்கும்” என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களின் பேசிய ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார். “தவறு எங்கு நடந்தாலும் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். எங்களை யாராலும் தடுக்க முடியாது” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா “தங்கள் பிள்ளையை ஒருமுறை கடைசியாக அந்த குடும்பத்தினரால் பார்க்க முயவில்லை. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருடைய கடமையை உணர வேண்டும். நீதி கிடைக்கும்வரை நாங்கள் இந்த பேராட்டத்தை தொடர்வோம் ” என்று கூறினார்.

இதற்கிடையில், ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் “சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணையை நாங்கள் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனிடையே இன்று இமாச்சல் பிரதேசத்தில் ‘அடல் சுரங்கப்பாதையை’ திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி “பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுப்பதில் நமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்