Aran Sei

ராகுல் காந்தியே தாக்கப்பட்டால் சாமானியனின் நிலை என்ன? – ஸ்டாலின் கேள்வி

Image Credits: Odisha TV

பிரியங்கா காந்தி வாத்ராவுடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸுக்குச் செல்ல முற்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல்துறையினர் அவரை லத்தியால் அடித்துத் தரையில் தள்ளியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரிகள், அவர்கள் சென்ற கரை நிறுத்தியவுடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹதராஸை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் பிறகு ராகுலும் பிரியங்காவும் அவர்களை தடுத்து நிறுத்திய உத்தரபிரதேச அரசை கண்டித்து ட்வீட் செய்துள்ளனர்.

முன்னதாக, உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியல் சாதியைச் சேந்த பெண் செப்டம்பர் 14-ம் தேதி நால்வர் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் 15 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறுதிச் சடங்குகூட செய்யவிடாமல், இரவோடு இரவாக காவல்துறையினர் வற்புறுத்தி அந்த பெண்ணின் உடலை தகனம் செய்ய வைத்ததாக, அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்.

 

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஒரு மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார், உண்மைகள் அடக்கப்படுகின்றன, இறுதியில் இறுதிச் சடங்கின் உரிமையும் அவளுடைய குடும்பத்தினரிடமிருந்து பறிக்கப்படுகிறது,” என்றும் “இது மிகவும் தவறானது மற்றும் அவமநகரமானது,” என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெனின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் ஹதராஸை நோக்கி செல்லும் பொது உத்தரபிரதேச காவலர்கள் அவர்களது காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். ராகுல் காந்தியை தாக்கி கீழேயும் தள்ளியதாக அவர் கூறியுள்ளார்.

“நான் தனியாக ஹத்ராஸுக்கு நடக்க விரும்புகிறேன். தயவுசெய்து என்னை எந்த பிரிவின் கீழ் கைது செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள்,” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது, காவலர்கள் அவரை ஐபிசியின் 188 ஆவது பிரிவின் கீழ் கைது செய்வதாகக் கூறியுள்ளனர்.

“அவரை இங்கே நிறுத்திவிட்டோம். தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை அவர் மீறியுள்ளார். அவர்கள் முன்னேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று நொய்டா ஏடிஜிபி ரன்விஜய் சிங் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

இச்செயலை கண்டித்துள்ள ராகுல் காந்தி “துக்க காலங்களில், அன்புக்குரியவர்கள் தனியாக விடப்படுவதில்லை. துக்கத்தில் ஒரு குடும்பத்தை சந்திப்பதும் அரசாங்கத்தை பயமுறுத்துகிறது என்பது உத்தர பிரதேசத்தின் நிலையாக உள்ளது. இவ்வளவு பயப்பட வேண்டாம், முதல்வரே!” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “இதுபோன்ற இரக்கமற்ற மற்றும் கொடூரமான அரசாங்கத்தின் கீழ் குடிமக்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்கள் மற்றும் அநீதிகளின் அளவைக் காட்டும் ஹத்ராஸ் மற்றும் பால்ராம்பூர் வன்கொடுமை சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்திய மகள்களுக்கு நீதி கோரியதற்காக ராகுல் காந்தியே தாக்கப்பட்டால் யோகி ஆதித்யனாத்திடமிருந்து சாமானியர்களை காப்பாற்ற என்னவிருக்கிறது?” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்