Aran Sei

`பொய் சொல்வதில் மோடியுடன் போட்டியிட முடியாது’ – ராகுல் காந்தி

பொய் சொல்வதில் மோடியுடன் போட்டியிட முடியாது என்று நேற்று நடந்த பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இன்று தொடங்கி, மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில்  காங்கிரஸும் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில்,  நேற்று வால்மீகி நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “ பணமதிப்பிழப்பு மற்றும் பொதுமுடக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததே, நாடு முழுதும் உள்ள சிறிய விவசாயிகள் மற்றும் சிறிய தொழிலாளர்களை அழிக்கத்தான். ஆனால் அவருடன் பொய் பேசுவதில் போட்டியிட யாராலும் முடியாது, நிச்சயம் என்னால் முடியாது.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மோடியின் வாக்குறுதிகளைப் பற்றிக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி தேர்தல் வாக்குறுதி வழங்கினார். தான் சொல்வதைச் செய்ய முடியாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்து அவர் பொய் சொன்னார், மக்களுக்கும் அவர் சொல்வதைச் செய்ய முடியாது என்பது நன்றாக தெரியும். இப்பொழுது பீகார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகருக்கு மோடி வந்து `ஆண்டுக்கு 2 கோடி பேருக்குப் புதிதாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் என்றால் என்ன ஆகும்? இங்கு கூடியுள்ள மக்கள் அவரைத் துரத்துவார்கள்” என்று மோடியைத் தாக்கியுள்ளார்.

மேலும், “காங்கிரஸ் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்ததைக் கொண்டு வந்தது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது. நாட்டை வழிநடத்த எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது. பொய் சொல்வதில் யாராலும் அவரை வெல்ல முடியாது.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகாரில் இன்று காலை, முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போதும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் தனது ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தத் தேர்தலில் நீதிக்கும் வேலை வாய்ப்பிற்கும் வாய்ப்பளியுங்கள். இந்த முறை உங்கள் வாக்கு பெருங்கூட்டணிக்கு மட்டும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்