Aran Sei

10 ஆண்டுகளில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் 6% அதிகரிப்பு

2009-ம் ஆண்டிலிருந்து 2018 வரை இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 6% அதிகரித்துள்ளது என, நீதிக்கான தேசிய தலித் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (National dalit movement for justice – NDMJ) தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ”நீதிக்கான தேடல்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 11-ம் தேதி இயக்கத்தின் பொதுச்செயலாளர் வி.ஏ.ரமேஷ் நாதன் தலைமையில் நடந்த இணையவழி சந்திப்பில், உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National crime redcords bureau) தரவுகள் அடிப்படையில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான குற்றங்களும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) செயல்பாடும் இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

2009-ல் 20.1% என இருந்த தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டுக்குள் 21.3% ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஆதிக்க சாதியினரால் தொடர் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் வன்முறைக்கும் தலித் பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். கொரோனா காலத்திலும் பெண்கள் பலவகை அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 2,05,146 வழக்குகளில் 41,867 வழக்குகள் (20.4%) பட்டியலின பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பானவை.” என அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 88.5% வழக்குகளின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை வெளியிட்ட நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ”இன்றைய தேதியில் எல்லா நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளாதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடு எந்தளவுக்கு பயனளிப்பதாக உள்ளது என்பது தெளிவாக இல்லை” எனக் கூறினார். சமூகத்தின் உயர்வு தாழ்வுகள் நீக்கப்படுவதற்கு கல்வி சிறந்த ஆயுதம் என்றும் முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் நாதன், ”வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று கூறி வருவோருக்கான பதிலாக இந்த அறிக்கை அமையும்” என்று கூறினார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், “மண்ணின் மைந்தர்களான பட்டியலின மக்கள் சாதியின் பெயரால் தொடர்ந்து தீண்டாமைக் கொடுமைகளுக்கும், வன்முறைக்கும் உள்ளாகிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக. நீடித்து வரும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த சிறப்புச் சட்டமும் இருந்திராத நிலையில், பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ல் இயற்றப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகள் கழித்து 1995-ல் இச்சட்டம் மிக தாமதமாகவே நடைமுறைக்கு வந்தது.” எனக் கூறினார்.

மேலும், “அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், வன்முறைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து பெறப்பட்டவை மட்டுமே. தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பல வன்முறை குற்றங்கள் காவல்துறையினரால் முதல் தகவல் அறிக்கையாக கூட பதிவு செய்யப்படாமல் நிராகரிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அவர்கள் தயாராக இல்லை.” என்றார்.

”சட்டங்களும் விதிமுறைகளும் இருந்தாலும் கூட, தீண்டாமையை ஒழிக்கவோ, பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவோ அவை பயன்படவில்லை. அரசுக்கும் தீண்டாமை கொடுமைகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. நீதிக்காக நாம் தான் போராட வேண்டும்” என தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்