இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சந்தித்துக்கொண்டனர்.
இந்த நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு (Quadrilateral Security Dialogue) நடத்துவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் சந்தித்துக்கொண்டனர். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையில் சச்சரவு அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூறுகிறது.
Delighted to join my QUAD colleagues at our Ministerial consultations in Tokyo. Thank FM @moteging for his gracious hospitality.https://t.co/hFSZRPu7Rf pic.twitter.com/1gfxiHdHXs
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 6, 2020
கொரோனா நோய்ப் பரவல் இன்னமும் முடிவுறாத நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா) இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் திறந்தநிலையையும் தொடர்ந்து பராமரிப்பதற்குக் கூட்டாக உறுதியேற்றுள்ளோம். சட்டத்திட்டங்களின் அடிப்படையிலான பன்னாட்டு உலக ஒழுங்கையும் நாடுகளின் எல்லைகளை மதிக்க உறுதியுடன் நம்முடைய நாடுகள் இருக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் கூட்டத்தில் பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலுக்கும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்தார். சீனாவுக்கு எதிர்வினையாற்றவே இந்த நான்கு நாடுகள் ஒன்றிணைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுரண்டல், ஊழல், கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மக்களைப் பாதுகாப்பது என்பது முன்பு எப்போதைக் காட்டிலும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளது என்று பாம்பியோ கூட்டத்தில் நேரடியாகவே சீனாவை விமர்சித்தார்.
மூன்றாவது தரப்பைக் குற்றம் குறை கூறுவதற்கு மாறாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையில் பரஸ்பரப் புரிதலையும் நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் நடந்து முடிவதற்குள் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.