Aran Sei

” போராட்டத்துக்கு ஆதரவாக உயிர் தியாகம் ” – பஞ்சாப் வழக்கறிஞர் தற்கொலை

Image Credit : Indian Express

மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், கருப்புச் சட்டங்களுக்காக பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாபின் ஜலாலாபாதைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்ஜித் சிங் ராய், பாரதிய கிசான் யூனியன் – உக்ரஹான் என்ற விவசாய சங்கத்துடன் இணைந்து டெல்லியின் திக்ரி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அவரை நேற்று காலை விவசாய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு இரண்டு கடிதங்களை கொடுத்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

அமர்ஜித் சிங் ஜலாலாபாதில் ஒரு பிரபலமான வழக்கறிஞராகவும் நோட்டரி பப்ளிக் ஆகவும் இருந்தார் என்று திக்ரி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஜலாலாபாதைச் சேர்ந்த அம்ரித்பால் சிங் கூறியுள்ளார்.

அமர்ஜித் சிங் பிற போராட்டக் காரர்களிடம் ஒப்படைத்த கடிதங்களில் ஒன்று, ஜலாலாபாத் வழக்கறிஞர் சங்கம், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஜலாலாபாத் சப் டிவிஷனல் மஜிஸ்திரேட்டுக்குக் கொடுத்த கடிதம். இன்னொரு கடிதம் பிரதமருக்கு அமர்ஜித் சிங் எழுதிய 18-12-2020 தேதியிட்ட கடிதம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் “அகங்காரத்துடன்” நடந்து கொள்வதாகவும், சிறப்பான “முதலாளித்துவ (அம்பானி, அதானி) நலன்களுக்காக” அவர் வேலை செய்வதாகவும் அமர்ஜித் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“விவசாயிகளும் தொழிலாளர்களும் உங்களது மூன்று கருப்பு விவசாயச் சட்டங்களால் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். பொதுமக்கள் ரயில்வே பாதைகளிலும், சாலைகளிலும் போராடுவது வோட்டுகளுக்காக இல்லை, மாறாக, அவர்களது குடும்பங்களின் வாழ்வுக்காகவும், எதிர்கால தலைமுறைகளின் வாழ்வுக்காகவும்.”

“தயவு செய்து ஒரு சில முதலாளிகளுக்காக விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள், அவர்களை பூச்சிக் கொல்லி சாப்பிடும் நிலைக்குத் தள்ளாதீர்கள்.”

“சமூக ரீதியாக நீங்கள் பொதுமக்களை ஏமாற்றி விட்டீர்கள். அரசியர் ரீதியாக நீங்கள் உங்கள் கூட்டணி கட்சிகளான சிரோமணி லோக்தள் போன்ற கட்சிகளை ஏமாற்றி விட்டீர்கள்.”

“இந்த உலகளாவிய போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவிப்பதற்காக நான் இந்த தியாகத்தைச் செய்கிறேன். உங்கள் கேளாத, பேசாத மனசாட்சியை உலுக்குவதற்காக தியாகத்தை செய்கிறேன். பாரதிய விவசாயி தொழிலாளி ஒற்றுமை ஓங்குக”

என்று அவர் எழுதியுள்ளார்.

பாரதிய கிசான் யூனியன் – உக்ரகான் துணைத் தலைவர் ஷிங்கார சிங் மான், “இது அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு. ‘தற்கொலை வேண்டாம், போராட்டம்’ என்று எப்போதுமே எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். யாரும் இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது.”

“அரசு இப்போதாவது விழித்தெழுந்து, என்ன நிலவரம் என்பதைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உண்மையிலேயே மக்களுக்கான அரசாக இருந்தால் இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்”

என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்