Aran Sei

‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

பாரதிய கிசான் யூனியனை சேர்ந்த விவசாயிகள் தலைவரான ஜாக்சீர் சிங், நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது கிராமத்தில் உள்ள அவரது வயல்களை நன்கு கவனித்துக் கொள்வதை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.

“போராட்டம் தொடங்கி குறைந்தது 100 நாட்கள் கழித்துதான், நான் ஊர் திரும்புவேன். இங்கு வருவதற்கு முன்னால், என் வயலில் கோதுமை பயிரை விதைத்துவிட்டு வந்தேன். இப்போது அதை கிராம மக்கள் மட்டும்தான் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்கள் என்னுடைய வயல்களின் படங்களையும் காணொளிகளையும் தவறாமல் எனக்கு அனுப்புகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

“என் பயிர்களை விரைவில் அறுவடை செய்ய வேண்டும். ஆனால் நான் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், என் கிராமத்தினர் என்னுடைய பயிரை கவனித்துக்கொண்டு, அறுவடையையும் செய்துவிடுவார்கள்.” என்று அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘உண்மையை பேச முடியாததால் விலகுகிறேன்’ – விவசாயிகள் போராட்டத்தில் ராஜினாமாவை அறிவித்த பத்திரிகையாளர்

“ஒவ்வொரு வாரமும், 3,500 க்கும் மேற்பட்டவர்கள் உள்ள எங்கள் கிராமத்திலிருந்து, 17 முதல்18 பேர் டெல்லி சிங்கு எல்லைகளுக்குச் செல்வோம். அறுவடை வேலைகள் முடிய 2 முதல் 3 வாரங்கள் வரை ஆகும். ஆகவே, எல்லையில் இருப்பவர்களின் வேலையை கிராமத்தில் உள்ள யாராவது ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்வோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் கிராமக் குழு ஒன்று இதை மேற்பார்வையிடும். ஆகவே, யாருடைய வேலையும் பாதிக்கப்படுவதில்லை.” என்று  ஜாக்சீர் சிங் கூறியுள்ளார்.

ஜாக்சீர் சிங்கின் கிராமத்தை போலவே, பஞ்சாப் மாநிலத்தின் பல கிராமங்களில் அறுவடை வேலைகளை எவ்வாறு கையாள்வது என்று திட்டமிட கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கவுள்ள கோடை – போராட்டக் களத்தில் முன்னேற்பாடுகளை செய்யும் விவசாயிகள்

பாரதிய கிசான் யூனியனின் துணைத் தலைவர் மஞ்சீத் தனேர், “புதன்கிழமை பிற்பகல் டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகளை சந்தித்து பேசினேன். இங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, கிராமங்களில் அறுவடைகளையும், கொள்முதல்களையும் எப்படிச் செய்வது என்று விவாதித்தோம்.” என்று கூறியுள்ளார்.

“மார்ச் 8-ம் தேதி முதல் பெண்கள் போராட்டக்களத்தில் அதிக எண்ணிக்கையில் இணைவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் பால் கறவை, அறுவடை செய்யும் விவசாயிகளை கவனித்துக்கொள்ளுதல், கோதுமை வைக்கோலை தயாரித்தல், சேமித்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். கூட்டு குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இதனால் பெரிய பிரச்சனை இருக்காது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்