Aran Sei

ஜனவரி 26 – டெல்லி டிராக்டர் பேரணிக்கு பஞ்சாபில் பெருமளவு தயாரிப்புகள்

Image credit : thewire.in

மிருத்சர் முதல் ஜலந்தர் வரை, பதிந்தா முதல் சண்டிகர் வரை, பட்டியாலா முதல் ஃபரீத்கோட் வரை பஞ்சாபின் எல்லா இடங்களிலும், போராட்ட பேரணிகளில் பங்கேற்கும் டிராக்டர்கள் நம் கவனத்தை கவர்கின்றன என்கிறது தி வயர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கங்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்திருப்பதை ஒட்டி இந்தத் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

டிராக்டர் பேரணியை ஒட்டி டீசல் டாங்குகள், துணை பொருட்கள், கருவிகள், மெக்கானிக்குகள், தார்பாலின், விவசாய பாடல்களை ஒலிக்க விடுவதற்கான உயர்தர பாடல் கருவிகளையும் விவசாயிகள் தயாரித்து வருவதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது. பல விவசாயிகள் கூடுதல் எஞ்சின் திறனுடனும், டிராக்டரை சுற்றி இரும்பு கவசத்துடனும், ஓட்டுநரின் இருக்கையைச் சுற்றி இரும்பு வலையுடனும் தயாரித்து வருகின்றனர்.

Image credit : thewire.in
Image credit : thewire.in

ஜலந்தர்

“நவம்பர் 26-ம் தேதி நாங்கள் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது ஹரியானா போலீஸ் எங்கள் பாதையில் கற்களையும் பாறைகளையும் போட்டு தடுத்து நிறுத்தியது, தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியது, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது, இருப்பினும் நாங்கள் அமைதி வழியில் போராடுகிறோம்.

இப்போது டெல்லி டிராக்டர் பேரணிக்குச் செல்லும் போது, பாதுகாப்பாக தயாரித்துக் கொள்ள வேண்டுமல்லவா” என்கிறார் ஜலந்தரின் பதியானா கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் சிங் பெய்ன்ஸ்.

ஹோஷியார்பூர்

பார்தி கிசான் யூனியன் (ரஜேவால்) மாவட்டத் தலைவர் குர்வீந்தர் சிங் கங்கூரா, “ஜனவரி 11 முதலே நாங்கள் கிராமங்களில் டிராக்டர் பேரணிகளை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும் டிராக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் டிராக்டர் பேரணியில் பங்கேற்க ஆவலாக உள்ளனர்.

இது வரை நாங்கள் 5 டிராக்டர் பேரணிகளை நடத்தியுள்ளோம்.” என்று கூறுகிறார்.

“எல்லா பழைய டிராக்டர்களையும் பழுதுபார்ப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதற்கு விவசாயிகள் தாராள நிதி உதவி செய்கின்றனர். டீசல் செலவை மிச்சப்படுத்துவதற்காக 4 டிராக்டர்களை ஒரு டிராலியில் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் அவர்.

அமிருத்சர்

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் தலைமையில் ஒரு டிராக்டர்களின் அணி ஜனவரி 12-ம் தேதி டெல்லி சென்றுள்ளது. இன்னொரு டிராக்டர் அணி ஜனவரி 20-ம் தேதி புறப்படவுள்ளது.

பதிந்தா

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) பதிந்தா நகரில் ஒரு பேரணியையும், பின்னர் பதிந்தா சண்டிகர் நெடுஞ்சாலையில் ஒரு பேரணியையும் நடத்தியது.

ஏக்தா உக்ரஹான் தலைவர்களில் ஒருவரான ஜக்சிர் சிங் ஜும்பா, பதிந்தா மாவட்டத்தின் 7 வட்டாரங்களிலும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணிக்கான திட்டத்தை அறிவித்தவுடன், அதன்படி டெல்லிக்குச் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பூச்சோ குர்த் கிராமத்தைச் சேர்ந்த, கீர்த்தி கிசான் யூனியன் மாவட்டத் தலைவர் அமர்ஜித் சிங் ஹனி, தனது விவசாயிகள் சங்கம் 2,500 தன்னார்வலர்களை பதிவு செய்துள்ளதாக கூறுகிறார். “ஜனவரி 22, 23 தேதிகளில் 400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் திக்ரி எல்லைக்குச் செல்வோம்” என்று கூறுகிறார்.

“நாள் முழுவதும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எல்லோருமே இந்த டிராக்டர் பேரணியில் இணைந்து கொள்ள உற்சாகமாக உள்ளனர். விவசாயிகளின் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி விட்டதை இது காட்டுகிறது” என்கிறார் அவர்.

ஃபரீத்கோட்

ஜனவரி 16-ம் தேதி தீப் சிங் வாலா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்தியுள்ளார்கள்.

ஜலந்தர்

சட்டோவாலி கிராமத்தைச் சேர்ந்த குருத்வாரா, கிராமத்து மக்களை பொற்கோவிலுக்கு அழைத்துச் செல்ல ரூ 25 லட்சம் செலவில் ஒரு பேருந்தை வாங்கியுள்ளதாகவும், டிராக்டர்களைத் தவிர இந்த பேருந்திலும் பெண்களையும் குழந்தைகளையும் சிங்கு எல்லைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று தோபா கிசான் சங்கர்ஷ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குர்பிரீத் சிங் அத்வால் கூறியுள்ளார்.

“ஜனவரி 23-ம் தேதி 500க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், கார்கள், ஜீப்புகளுடன் டெல்லிக்கு புறப்படுகிறோம்” என்கிறார் அவர்.

Image credit : thewire.in
Image credit : thewire.in

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) மாநில செயலாளர் ஷிங்கார சிங் மான் திக்ரி எல்லையில் போராட்டத்தில் உள்ளார். குடியரசு தின டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான விவசாயிகள் ஜனவரி 21, 22 தேதிகளில் டெல்லியை அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

“அமைதியான கட்டுப்பாடான பேரணியை நடத்தும்படி விவசாயிகள் சங்கங்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மோடி அரசும் அதன் ஆதரவாளர்களும் விவசாயிகள் மீது அவதூறு சொல்லி வருவதை நாம் அறிவோம். எனவே, எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்