Aran Sei

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

டந்த சில வாரங்களாக, மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயச் சங்கங்கள் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல், முகேஷ் அம்பானி, கௌதம் அம்பானி போன்றவர்களின்  பெருநிறுவனங்களைப் புறக்கணித்து முற்றுகையிடப் போவதாக பஞ்சாப் விவசாயச் சங்கங்கள் அறிவித்திருந்தன.

பெட்ரோல் பங்குகள்

பஞ்சாப்பில் மொத்தம் 85 ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகள் உள்ளன. விவசாயச் சங்கங்களின் புறக்கணிப்பிற்குப் பிறகான ஒரு வாரத்தில், அதன் வருமானம் 50 சதவீதம் வீழ்ந்துள்ளது. விவசாயிகள் தடுப்புகளை வைத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளை அடைத்துள்ளதால் அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயச் சங்கங்களின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கை, மாநிலத்தில் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. பொருளாதாரம் மட்டுமன்றிச் சமூகத்திலும் இதன் தாக்கத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மக்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் ரிலையன்ஸுக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடிகளையும் மோகா மற்றும் சங்க்ருரில் உள்ள அதானி நிறுவனத்தின் கிடங்குகளையும் குரு கோபிந் சிங்கின் ’எச்.பி.சி.எல்’ சுத்திகரிப்பு நிலையங்களையும் வால்மார்ட் நிறுவனத்தின் கடைகளையும் சுங்கச்சாவடிகளையும் எஸ்ஸார் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளையும் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளதாக தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : The Wire

பத்திந்தாவில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கின் பங்குதாரர்களில் ஒருவரான பங்கஜ் பன்சால், தி வயர்  செய்தித் தளத்திடம் பேசிய போது, “அக்டோபர் 1-ம் தேதி முதல் பாரதிய கிஸான் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கின் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்கள். அதனால் எங்கள் வியாபாரம் சுத்தமாக நின்றுவிட்டது. ஊழியர்கள் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். விவசாயிகள் எங்கள் பெட்ரோல் பங்க்-கைப் புறக்கணித்தாலும் ஏற்கனவே அவர்களுக்கு எங்கள் ஆதரவை அளித்துள்ளோம். ஏனென்றால், எங்கள் ஊழியர்கள் 18 பேரில் 15 பேர் இங்குள்ள விவசாயிகளின் மகன்கள்தான்.” என்று கூறியுள்ளார்.

இந்தத் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களும் ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளனர். அதில் அவர்கள் எப்போதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தந்து வருவதாகவும் விவசாயிகளின் புறக்கணிப்பால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்றும் கூறிவருகிறார்கள்.

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டாக வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. அரசு எடுத்த முடிவிற்காக தங்கள் மேல் குறிவைக்காதீர்கள் என்று விவசாயிகளை நோக்கி அவர்கள் பேசியிருந்தார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 85 பெட்ரோல் பங்க்குகளில் 15 பங்க்குகள், ஷிரோமனி அகாலி தல் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடையவை. இவர்கள் நேரடியான உரிமையாளர்கள் இல்லை என்றாலும், அதில் பங்குதாரர்களாக உள்ளார்கள் என்று தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : The Wire

ஜியோ சிம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் புறக்கணிப்புகளைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையாகிய ‘ஜியோ’ சிம்மையும் புறக்கணிக்கும்படி விவசாயிகள் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஹோஷியர்பூரைச் சேர்ந்த விவசாயி ஆன ஹர்சிம்ரன் சிங், தி வயர் செய்தி தளத்திற்குப் பேசிய போது, “நாங்கள் ஏன் ஜியோவை உபயோகப்படுத்த வேண்டும். அந்நிறுவனத்தின் முதலாளி அம்பானி, பஞ்சாபில் விவசாயத்தையே அழிக்கப் பார்ப்பவர். இதுவும் ஒரு வகையான போராட்டம்தான். நான் பலரிடம் ஜியோவைப் புறக்கணிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அதைச் செய்து, வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறியிருக்கிறார்கள்” என்றார்.

மோகா மற்றும் சங்க்ருரில் உள்ள அதானி நிறுவனத்தின் உணவுக் கிடங்குகளில், ‘கோ பேக் அதானி’ என்ற வாசகங்களை, விவசாயிகள் எழுதியிருப்பதாக தி வயர் குறிப்பிட்டிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்