Aran Sei

பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் : 15 நாட்களுக்கு வாபஸ்

Image Credits: Telegraph India

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருகின்றன. நவம்பர் 23-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக பிடிஐ  செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாராயினும், அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கத் தவறினால் மீண்டும் ரயில் மறியலில் ஈடுபடவுள்ளதாக வேளாண் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், செப்டம்பர் 24-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

’ஏன் இன்னும் சரக்கு ரயில்களை இயக்கவில்லை‘ – பஞ்சாப் விவசாயிகள் கேள்வி

முன்னதாக, விவசாயிகள் சரக்கு ரயில்களை இயக்க அனுமதித்திருந்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் ஆகிய இரண்டு சேவைகளையும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வரும் பாரத் கிசான் யூனியன், உள்ளிட்ட விவசாய அமைப்புகளுக்குப் பேச்சுவார்த்தைக்காகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்தார். அதன்படி சண்டிகரில் உள்ள, கிசான் பவனில், விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி முதல் தற்காலிகமாக ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அங்குள்ள செய்தியாளர்களுடன் பேசிய பாரத் கிசான் யூனியன் அமைப்பினர், “வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இல்லையெனில், மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

இந்த முடிவைப் பஞ்சாப் முதல்வரும் வரவேற்றுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், “நவம்பர் 23ம் தேதி இரவு முதல் 15 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன். மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இதன் மூலம் சரிசெய்யப்படும். மத்திய அரசு உடனடியாகப் பஞ்சாபில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்