Aran Sei

பஞ்சாபில் கைகள் கட்டப்பட்டு 4 கிமீ நடக்க வைக்கப்பட்ட தலித் சிறுவர்கள் – வழக்கு பதியப்பட்டது

Image credit : tribuneindia.com

ஞ்சாபின் சிங்க்ரூர் மாவட்டத்தில், 11 முதல் 13 வயதான நான்கு தலித் சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு 4 கிலோமீட்டர் தூரம் நடக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இது செய்யப்பட்டுள்ளது என்று தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

சிங்க்ரூர் மாவட்டத்தின் தூரி துணை பிரிவில் உள்ள பன்போரி மற்றும் பாசவுர் கிராமங்களுக்கிடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. தூரி சதர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு சிறுவர்களின் பெற்றோர் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.

இதன் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலானது என்று தி வயர் தெரிவிக்கிறது.

பாசவுர் கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவர்கள் பன்போரி கிராமத்தில் உள்ள ஒரு சமாதியிலிருந்து, ரூ 300 திருடியதாகவும் அவர்களை பன்போரி கிராம மக்கள் பிடித்து, பாசவுர் கிராமத் தலைவருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தாங்கள் பன்போரி கிராமத்துக்குப் போன போது, ஏற்கனவே அந்தச் சிறுவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன என்று பாசவுர் கிராமத் தலைவர் குர்னாம் சிங் கூறியுள்ளார்.

“நாங்கள் அவர்களை நடக்கச் சொல்லி ஒரு அபராதம் விதித்தோம். நாங்கள் யாரையும் தாக்கவில்லை. எங்களது எதிரிகள் பிரச்சினையை ஊதிப் பெருக்குகிறார்கள்” என்று அவர் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.

சில அடையாளம் தெரியாத நபர்கள், தங்களது கிராமங்கள் மீது பழி சுமத்துவதற்காக, இந்தக் காணொளியை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பன்போரி கிராமத்தவர்கள் தாங்கள் கைகளை கட்டவில்லை என்று மறுத்திருக்கின்றன. “கிராமத்தின் வழிபாட்டு தலத்திலிருந்து சில பொருட்களை திருடியவர்களை, சிசிடிவி காமராவில் அடையாளம் கண்டு அவர்களை கிராமத்துக்குக் கொண்டு வந்தோம். அவர்கள் கைகளை நாங்கள் கட்டவில்லை. பாசவுர் கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைத்தோம்” என்று பன்போரி கிராமத் தலைவர் பல்தேவ் கவுரின் கணவர் சுரீந்தர்பால் சிங் கூறியுள்ளதாக தி டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

“சிறுவர்களில் ஒருவருக்கு அடித்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நான் போலீசிலும் சிறுவர் உரிமைகள் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்துள்ளேன். எங்களுக்கு நீதி வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வேண்டும்” என்று ஒரு சிறுவனின் அப்பா குர்மீத் சிங் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தூரி சதன் போலீஸ் நிலைய பொறுப்பாளர் தீபிந்தர் பால் சிங், பாசவுர் கிராமத் தலைவர் குர்னாம் சிங் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 323, 341, 34 ஆகியவற்றின் கீழும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்