Aran Sei

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – வரலாறு காணாத அரசு கொள்முதல்

Image Credit : indianexpress.com

ஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தின் ஜும்பா கிராமத்தில் உள்ள தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் இருந்து மூன்று முறைகளில் பறிக்கப்பட்ட 52 குவின்டால், கொட்டை நீக்கப்படாத பருத்தியை, ராஜ்வீர் சிங் கோல்டா பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் குவின்டாலுக்கு ரூ 5,665 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்றுள்ளார்.

பருவத்தின் தொடக்கத்தில் சந்தை விலை ரூ 4,600-4,800 / குவின்டால் என்ற அளவில் இருந்தது. பருத்தி கார்ப்பரேஷன் சரியான நேரத்தில் சந்தையில் நுழைந்தது குறித்து 42 வயதான ராஜ்வீர் சிங் மகிழ்ச்சியடைகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் சிங் திவானா என்ற விவசாயியும் தனது நான்கு ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரில் பயிரிட்ட 21 குவின்டால் பருத்தியை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்றார்.

பருத்தி மட்டுமல்ல. 2020-21-ம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையான குவின்டாலுக்கு ரூ 1,988 விலையில், 202.78 லட்சம் டன் நெல்லை அரசு நிறுவனங்கள் பஞ்சாபிலிருந்து வாங்கியுள்ளன.

இது மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் பலன் என்று ராஜ்வீர் சிங் கோல்டாவும், நிர்மல் சிங் திவானாவும் கூறுகின்றனர்.

“இந்த ஆண்டு எனக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தது. ஆனால் முந்தைய ஆண்டுகளில் நாங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலைக்குக் கீழே தனியார் வர்த்தகர்களுக்கு விற்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே பருத்தி கார்ப்பரேஷன் வாங்க ஆரம்பிக்கும்.” என்கிறார் ராஜ்வீர் சிங்.

டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரியில் மூன்று நாட்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு ராஜ்வீர் சிங் திரும்பி வந்துள்ளார். “ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலை கிடைப்பதை உறுதி செய்யவும், சரியான நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவுமே இந்தப் போராட்டம்” என்கிறார், அவர்.

திக்ரியில் பொது சமையலுக்கான பொருட்களை ஏற்பாடு செய்து வரும் நிர்மல் சிங் திவானா, “எங்களது போராட்டத்தின் காரணமாக இந்த பருவத்தில் பருத்தி கார்ப்பரேஷன் சந்தையில் பருத்தியை வாங்கியது. விவசாயச் சட்டங்களில் பிரச்சினை இல்லை என்று காட்டுவதற்கு அரசு விரும்புகிறது” என்று கூறுகிறார்.

பதீந்தாவின் நதானா வட்டத்தின் கங்கா கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடும் மன்மீத் சிங், பருத்தி கார்ப்பரேஷனிடம் விற்ற 53 குவின்டால் பருத்திக்கு அவருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தது. ஆனால், அவரும், திக்ரி எல்லைக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

“மோடி அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்கள் அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும், மேலும் அரசாங்கம் இன்று செய்து வரும் சிறிதளவு கொள்முதலையும் நிறுத்தி விடும். அது எங்களை தனியார் வர்த்தகர்களின் தயவிலும் கார்ப்பரேட்டுகள் தயவிலும் முற்றிலுமாக விட்டுவிடும், ”என்று அவர் கூறுகிறார்.

வடமேற்கு இந்தியாவில் பருத்தி சந்தைக்கு வருவது செப்டம்பர் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.

  • இந்த முறை பஞ்சாபில் பயிரிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட 52.50 லட்சம் குவின்டாலில், டிசம்பர் இறுதி வரை சுமார் 32.50 லட்சம் குவின்டால் பருத்தி விற்பனை செய்யப்பட்டது. அதில் பருத்தி கார்ப்பரேஷன் 27.5 லட்சம் குவின்டால் (கிட்டத்தட்ட 85 சதவீதம்) பருத்தியை வாங்கியது.
  • 125 லட்சம் குவின்டால் பருத்தி விளையும் என்று எதிர்பார்க்கப்படும் ஹரியானாவில், இதுவரை வந்துள்ள 85 லட்சம் குவின்டால்களில் 52.73 லட்சம் குவின்டால் பருத்தியை அரசு நிறுவனம் வாங்கியுள்ளது.
  • ஒட்டுமொத்த 135 லட்சம் குவின்டால் பயிரில் 85.55 லட்சம் குவின்டால் விற்பனை செய்யப்பட்டுள்ள ராஜஸ்தானில் கூட, பிரதான கங்கநகர் பருத்தி வட்டாரத்தில் மூன்றில் இரண்டு பங்கை பருத்தி கார்ப்பரேஷன் வாங்கியுள்ளது.

பருத்தி கார்ப்பரேஷன் பெரிய அளவில், சரியான நேரத்தில் பருத்தியை வாங்கியது, சிறு விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுவதை உறுதி செய்தது மட்டுமின்றி, சந்தை விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் உயரவும் வழிவகுத்தன.

தனியார் வர்த்தகர்களும் பருத்தி சுத்தம் செய்யும் நிறுவனங்களும் தற்போது பதிந்தா சந்தையில் இருந்து நடுத்தர நீளமான பிரதான பருத்தியை (26.5-27 மிமீ இழை நீளம்) குவின்டாலுக்கு ரூ 5,800 விலை கொடுத்து வாங்குகிறார்கள். இது அதிகாரப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ 5,665-ஐ விட அதிகம்.

குவின்டால் ரூ 5,725 குறைந்தபட்ச ஆதரவு விலை கொண்ட நீண்ட இழை வகைகள் (27.5-28.5 மி.மீ) கூட ரூ 5,900-5,950 க்கு வாங்கப்படுகின்றன.

பதீந்தாவில் உள்ள பருத்தி கார்ப்பரேஷன் அதிகாரி, “இந்தப் பருவத்தில் நாங்கள் சாதனை அளவுகளை வாங்கியுள்ளோம். உண்மையில், கடந்த 10-12 நாட்களில் வாங்குவதை நிறுத்திவிட்டோம். குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை அதிகமாக இருக்கும் போது நாங்கள் வாங்கத் தேவையில்லை. ஆனால், சிறு குறு விவசாயிகள் எப்படியும் தங்கள் பயிரை எங்களுக்கு விற்றுவிட்டார்கள். ” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

குறிப்பாக

  • சீனாவிலிருந்து ஏற்றுமதி வேண்டல் அதிகரித்ததன் காரணமாக, சந்தை விலைகள் நிலைப்பட்டுள்ளன.
  • 2019-20 (ஆகஸ்ட்-ஜூலை) இல் 15.54 லட்சம் டன் ஆக இருந்த பருத்தி இறக்குமதி இந்த ஆண்டு 22.86 லட்சம் டன்னாக உயரும் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை கணித்துள்ளது.
  • உலகளாவிய விலை நியமமான ‘காட்லுக் ஏ இன்டெக்ஸ்’ படி இப்போதைய விலை நிலவரம் ஒரு பவுண்டுக்கு விலை 88.1 சென்டு (சுமார் ரூ 60.75), இது ஒரு ஆண்டுக்கு முன்பு 79.5 சென்ட் ஆகவும் கொரோனா நெருக்கடியின் உச்சத்தில் ஏப்ரல் தொடக்கத்தில் 60 சென்டுகளுக்குக் குறைவாகவும் இருந்தது.

“என்னைப் பொறுத்தவரை, அறுவடை செய்த உடனேயே, எனது விளைச்சலை மண்டிக்கு கொண்டு வரும் நேரத்தில், உறுதி செய்யப்பட்ட விலையைப் பெறுவது முக்கியமானது. பயிரை சேர்த்து வைத்து விலைகள் உயரும் வரை காத்திருக்க முடியாத விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அவசியம். எங்கள் குடும்பத்தை நடத்துவதற்கும், அடுத்த பயிரை விதைப்பதற்கும் எங்களுக்கு பணம் தேவை, ” என்கிறார் ராஜ்வீர் சிங் .

indianexpress.com தளத்தில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்