Aran Sei

மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை

ஞ்சாப் சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிப்பதற்கான ஒரு மசோதாவைக் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு மாநில அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.

மசோதா செவ்வாய்க்கிழமை அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சட்டங்களை முறியடிக்க மசோதா ஒன்றைக் கொண்டு வருவதாக முதலமைச்சர் செப்டம்பர் 29-ம் தேதி விவசாயச் சங்கங்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

பஞ்சாப் மாநிலத்தை விவசாய விளைபொருட்களுக்கான “முதன்மைச் சந்தை களம்” என்று அறிவிப்பதன் மூலம் மத்தியச் சட்டங்கள் மாநிலத்தில் செல்லாதபடி ஆக்குமாறு செய்யலாம் என்று எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சி மாநில அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சிரோமணி அகாலிதள் விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த அகாலிதள்ளைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் செப்டம்பர் மாதம் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

மத்திய அமைச்சர் பதவி விலகல் வெறும் நாடகம்: பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதிசெய்தல்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கடும் எதி்ரப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியது, மோடி அரசு. இவற்றை முறையே “APMC புறக்கணிப்பு மசோதா 2020” , “உணவுப் பதுக்கல் (கார்ப்பரேட்டுகளுக்குச் சுதந்திரம்) மசோதா 2020”, “ஒப்பந்த விவசாய மசோதா 2020” என்று அழைக்கிறார், ஆஷா-கிசான் ஸ்வராஜ்-ஐ சேர்ந்த கவிதா குருகான்டி.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

இந்த மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“பிரதமர் தனது நண்பர்களான அம்பானி, அதானி ஆகியோருக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் விவசாயச் சட்டங்களைக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால், பஞ்சாப் விவசாயிகள் தமது நிலத்தை யாரும் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். இந்தச் சட்டங்களைப் பஞ்சாபில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” என்று  விவசாயிகள் போராட்டக் குழுவின் அமிருத்சர் மாவட்ட தலைவர் தேவிந்தர் சிங் கூறியுள்ளார்.

“இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்பானி, அதானி, பிரதமர் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாப் மாநில பொதுச் செயலாளர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசு செவி மடுக்கவில்லை’: பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்

பஞ்சாப் விவசாயிகள் ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்களைப் புறக்கணிக்கும்படி அவற்றின் முன் மறியல் செய்தும், ஜியோ சிம்களைப் புறக்கணிக்கச் சொல்லியும் போராடி வருகின்றனர்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

இந்தச் சட்டங்களுக்குப் பின்னே தெளிவானதொரு கார்ப்பரேட் ஆதரவு நோக்கம் உள்ளது. இடைத்தரகர்கள் விவசாயிகள் மீது கொண்டுள்ள பிடியை மேலும் இறுகச் செய்யும் என்கிறார் ஊடகவியலாளர் சாய்நாத்.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

பஞ்சாப் விவசாயிகள் அக்டோபர் 20-ம் தேதி சந்தித்து அடுத்தகட்ட அணுகுமுறையைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.

“நாளை தொடங்கவிருக்கும் சட்டப் பேரவை சிறப்பு அமர்வு தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கும், மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை விவாதிக்கவும் காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களுடன் ஒரு விரிவான கூட்டத்தில் கலந்துகொண்டேன்” என்று பஞ்சாப் முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டி முறையும் என்னவானாலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான அரசியல் சட்டத்துக்கு விரோதமான சட்டங்களை சரியான முறையில் முறியடிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர் என்று siasat.com செய்தித் தளம் குறிப்பிடுகிறது.

“மொத்த உலகமும் பஞ்சாபை நிறைய எதிர்பார்ப்புகளுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும், மாநிலத்தின் விவசாயிகளையும் விவசாயத் துறையையும் பாதுகாப்பதற்கு எம்எல்ஏக்களின் கருத்துகள் மிகவும் முக்கியமானவை” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

காங்கிரசைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம் அரசியலுக்கானது அல்ல, மாறாக, “பஞ்சாபின் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கானது” என்று கூறிய கேப்டன் அமரீந்தர் சிங் விவசாயச் சமூகத்தின் நலன்களைக் கருத்தில்கொண்டே முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதாக சியாசத் செய்தித் தளம் தெரிவிக்கிறது.

மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியங்களை பரிசீலிக்குமாறு பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி முதலமைச்சர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்