புல்வாமா தாக்குதலின் போது எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயன்றார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் வல்லபபாய் படேல் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், அவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதை வைத்து சிலர் அரசியல் செய்தார்கள் என்று கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்த போதிலும் பாகிஸ்தான் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மட்டுமே புல்வாமா தாக்குதல் நிகழ்ந்ததாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே கடந்த வியாழன் அன்று பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாத் சௌத்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய போது, “புல்வாமா தாக்குதல், இம்ரான் கான் தலைமையிலான அரசின் வெற்றி.” என்று கூறினார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது குறித்து சிலர் மட்டும் வருத்தப்படவில்லை என்பதை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.” என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
The country can never forget that some people were not saddened at the sacrifice of the security personnel during the Pulwama attack. At that time, these people were only doing politics…I request them not to do such politics in the interest of the nation: PM Modi https://t.co/8sTGRztHKS pic.twitter.com/2xo0xq3ZFM
— ANI (@ANI) October 31, 2020
“அந்த நேரத்தில் அவர்கள் அதை அரசியல் லாபத்தோடு அணுகியிருந்தார்கள். நாட்டின் நலன் கருதி இதுபோன்ற அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் கூறியுள்ளார்.
சில அமைப்புகள் வெளிப்படையாகவே பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது உலக அளவில் அமைதி மற்றும் மனிதநேயத்துக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கிறது என மோடி எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் எல்லா அமைப்புகளையும் வீழ்த்துவதற்கு அனைத்து நாடுகளின் அரசுகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் முன்னெப்போதையும் விட தற்போது அவசியப்படுகிறது என்று மோடி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தொடர்ந்து நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க இந்தியா தயாராக உள்ளது எனவும் பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பவாத் சௌத்ரி பேசியது குறித்து பாகிஸ்தான் மத்திய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் விமானப்படையின் பதில் தாக்குதல் நடவடிக்கை குறித்தே பவாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.” என்று விளக்கமளித்துள்ளதாக இந்திஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும், “கராச்சி உள்நாட்டுப் போரின் போது செய்ததுபோலவே, இந்திய ஊடகங்கள் பவாத்தின் உரையை திரித்துக் கூறி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது.” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.