விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது என்று ஃபிரன்ட்லைன் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைத் தவிர மற்ற துறைகளில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பது என்ற மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம் உருக்கு ஆலையின் உடைமை நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகம் என்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச் சொத்துக்களையும் தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் 100% பங்குகளை தனியாருக்கு விற்பது, இதன் மூலம் அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டை தனியாரிடம் ஒப்படைக்கப்பது என்ற முடிவை மத்திய அமைச்சரவை பிப்ரவரி 3-ம் தேதி எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம், 2021-22 ஆண்டில் ரூ 1.75 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவு துறைமுக நகரமான விசாகபட்டினத்திலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்களை தூண்டியுள்ளதாக ஃபிரண்ட்லைன் தெரிவிக்கிறது. இந்த ஆலையில் நேரடியாக 18,000 தொழிலாளர்களும், விசாகப்பட்டினம் நகரைச் சேர்ந்த மேலும் 80,000 பேரும் இந்த ஆலையைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சனிக் கிழமையன்று, ஆலையின் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆந்திராவில் இயங்கும் மிகப்பெரிய, மிகவும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களில் விசாகப்பட்டினம் உருக்கு ஆலையும் ஒன்று என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அதற்கு அடுத்த நாள், விசாகபட்டினம் வடக்கு தொகுதியைச் சேர்ந்த கந்தா சீனிவாச ராவ், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. கந்தா சீனிவாசராவ் தெலுகு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் உருக்கு ஆலை 2014-15 நிதியாண்டு முதல் இழப்புகளை எதிர்கொண்டுள்ளது என்று ஃபிரண்ட் லைன் தெரிவிக்கிறது. “இந்த ஆலைக்கு இரும்புத் தாது வழங்குவதற்கு சொந்தமான சுரங்கம் இல்லாததால் இழப்புகளை எதிர் கொண்டுள்ளது” என்று கந்தா சீனிவாச ராவ் கூறியுள்ளார்.
“நேரடியாக 18,000 நிரந்த தொழிலாளர்களுக்கும், 22,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வேலை அளிக்கும், மறைமுகமாக இலட்சக்கணக்கான பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விசாகப்பட்டினம் உருக்கு ஆலை தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒய்எஸ்ஆர்சிபி அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது” என்று தெலுகு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.
ஆந்திராவில் பல ஆண்டுகளாக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, 1970-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விசாகப்பட்டினத்தில் உருக்கு ஆலை அமைக்கும் முடிவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.
விசாகப்பட்டினம் நகரத்துக்கு தெற்கே 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு 73 லட்சம் உருக்கு உற்பத்தி செய்யும் கொள்ளளவை கொண்டுள்ளது. கட்டிடத் துறை, உள் கட்டுமானத் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றுக்குத் தேவையான நீளமான உருக்கு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
வடக்கு ஆந்திரா வளர்ச்சிக்கான மன்றம் (FDNA) என்ற அமைப்பின் தலைவர் அஜா சர்மா, “பொது நலன் என்ற பெயரில் அரசு இந்தப் பகுதி விவசாயிகளிடமிருந்து 20,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இந்த ஆலை ஒரு வலுவான தொழில்நுட்பத் திறனை கொண்டுள்ளது, நமது நாட்டில் கடற்கரையோரம் அமைந்த ஒரே உருக்கு ஆலை இதுதான், இதன் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ 2.5 லட்சம் கோடி” என்று கூறியுள்ளார்.
விசாகப்பட்டினம் உருக்கு ஆலைக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ 1 லட்சம் கோடிக்கு அதிகம் என்று ஃபிரண்ட்லைன் மதிப்பிட்டுள்ளது.
“இதை விற்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று அஜா சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர்சி கட்சி இந்தத் தனியார் விற்பனையை எதிர்க்கிறது. ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்து ஆலையை மீண்டும் லாபகரமான பாதைக்கு திருப்ப வேறு வாய்ப்புகளை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தின் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில், உருக்கு ஆலை பாதுகாப்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் எம் சீனிவாச ராவ் அதன் தலைமை பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
“நாங்கள் உயிரை விடக் கூடத் தயாராக இருக்கிறோம், ஆனால், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று அமைச்சர் சீனிவாச ராவ் கூறியுள்ளார்.
“ஒட்டு மொத்தமாக இந்த ஆலை ரூ 6,000 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதன் வசமுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ 1.25 லட்சம் கோடி” என்று அவர் கூறுகிறார்.
குர்மன்னபாலத்தில் உள்ள ஆலையின் முன்பு இன்று ஒரு போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.