Aran Sei

டெல்லி – மீரட் நெடுஞ்சாலையை கைப்பற்றிய விவசாயிகள் – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லி – காஜியாபாத் எல்லையிலும் டெல்லி – மீரட் அதிவிரைவு நெடுஞ்சாலையிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம் – டெல்லிக்குச் செல்ல தடுக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

மேலும், “நாங்கள் முன்பு சில நாட்கள் டெல்லி சிங்கு எல்லையில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் இப்போது போராட்டத்திற்கு அதிக விவசாயிகள் தேவைப்படுவதால், இப்போது இங்கு மீண்டும் வந்து இணைந்து கொண்டோம். எல்லாம் சரியாக நடந்தால், நாளை (டிசம்பர் 28) 200 டிராக்டர்கள் டெல்லி தரப்பிலிருந்தும் இந்த போராட்ட களத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று லூதியானாவை சேர்ந்த விவசாயியான ஜோகா சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

நேற்று (டிசம்பர் 26), டெல்லி மீரட் அதிவேக நெடுஞ்சாலையின் இருவழி பாதைகளையும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் முடக்கி வைத்துள்ளனர். அதனால், டெல்லியில் இருந்து வரும் வாகனங்கள் ஆனந்த் விஹார் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

“எங்கள் டிராக்டர்களை போராட்டக் களத்திற்கு செல்ல அரசு அனுமதிக்காத சமயங்களில் தான், நாங்கள் இப்படி செய்வோம். அவர்கள் எங்களை அனுமதித்ததும், நாங்கள் போக்குவரத்தை திறந்துவிடுவோம். எங்கள் டிராக்டர்கள் டெல்லி மீரட் நெடுஞ்சாலையில் குறைந்தது 4 கி.மீ தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களை நிறுத்துவதில்லை. அவற்றை உடனே அனுமதிக்கிறோம்.” என்று உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகரைச் சேர்ந்த குர்பிரீத் சிங் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

நேற்று முன்தினம் (டிசம்பர் 25) பிரதமர் மோடியின் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றிய உரை குறித்து பதிலளித்த குர்பிரீத் சிங், கோழி மற்றும் பசு வளர்ப்பு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இடையிலான பிரதமரின் ஒப்பீடு தவறாக உள்ளது என்றும் ”முட்டையையும் பாலையும் சிறிய அளவுகளில் வெவ்வேறு நபர்களிடம் விற்கலாம். ஆனால், நாங்கள் விளைவிக்கும் ஒரு குவிண்டால் தானியத்தை அப்படி விற்க முடியாது. எங்களிடம் எங்கள் தானியங்களை சேமித்து வைப்பதற்கான வசதி இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்