Aran Sei

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் பெரும் போராட்டங்களை உருவாக்கியிருக்கும், விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

“உங்க சாப்பாடும் வேண்டாம், திருத்தங்களும் வேண்டாம், கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – போராடும் விவசாயிகள்

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 6) இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்திய பகுதியான ஆல்ட்விச்சில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான இந்தியர் கூடி, மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றும் பின் அவர்கள் டிராஃபல்கர் சதுக்கப் பகுதியைச் சுற்றிப் பேரணியாகச் சென்றதாகவும், சம்பவ இடத்தில் இருந்த ராய்ட்டர்ஸ் செய்தித்தளத்தின் புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரும், இந்திய வம்சாவளிகளைச் சேர்ந்தோரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் அவர்கள் இந்தியாவில் நடந்து வரும் விவசாயப் போராட்டச் செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

மேலும், இந்த லண்டன் ஆர்ப்பாட்டங்களில் சமூக இடைவெளி சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சிலர் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் உடனே அப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லண்டன் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்