Aran Sei

ஹரியானா வாழ் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் – திருமாவளவன்

ரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர்  திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானா மாநிலத்தில் பஞ்சகுலா என்ற பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குடியிருப்புகளை இடித்து அவர்களுக்கு மாற்று வசிப்பிடமும் கொடுக்காமல் நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளது ஹரியானா மாநில அரசு” என்று கூறியுள்ளார்.

“வீடின்றித் தவிக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். ஹரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

“ஹரியானா மாநிலம், 1969-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் இரண்டாவது மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோடி பேருக்கும்மேல் இருக்கும் நிலையில் பஞ்சாபி மொழிக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தமிழை அம்மாநிலத்தின் இரண்டாவது மொழியாக அன்றைய முதல்வர் பன்சிலால் அறிவித்தார். அதன் காரணமாகத் தமிழர்கள் அங்கு கணிசமான அளவில் குடியேறினர்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அவர்கள் வசித்து வந்தாலும் அவர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமையையும் ஹரியானா மாநில அரசு வழங்கவில்லை. தமிழை இரண்டாவது மொழியாக வைத்திருந்தாலும் அங்கிருக்கும் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக்கூட நடத்தாமல் நாடோடிகளாகவே அம்மாநில அரசு நடத்திவந்தது” என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

“அவர்களுக்குக் குடும்ப அட்டையோ குடியிருப்புக்கான பட்டாவோ வழங்கப்பட்டது இல்லை. தமிழ் மக்களே தங்கள் சொந்த முயற்சியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தையும் அரசு தற்போது கைப்பற்றி, அவர்களது குடியிருப்புகளை இடித்து மாற்று இடமும் வழங்காமல் தமிழ்க் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்த் தொழிலாளர்களாக மட்டுமின்றி, அரசு ஊழியர்களாகவும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இங்கே வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது தமிழர்களுக்கு ஹரியானாவில் எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் நாடோடிகளாக நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“இந்நிலையில், தற்போது அங்குப் பாதுகாப்பற்ற சூழலில் பரிதவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்