Aran Sei

விபச்சாரத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமில்லை: மும்பை உயர்நீதி மன்றம்

credits:philosophytalk.org

பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் இல்லை என மும்பை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு முழுக்க காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று இளம் பெண்களுக்கு மும்பை உயர்நீதி மன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்தது.

மும்பை மலாட் அருகே சிஞ்சோலி பிந்தர் என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டு மூன்று பெண்களை கைது செய்து 2019 செப்டம்பர் 13-ம் தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பெற்றோருக்கு தெரிந்தே மூன்று பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், வயது வந்த பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது அவர்கள் சமுதாயத்தில் வழக்கமாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்தக் காரணங்களுக்காக வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களை பெற்றோரோடு அனுப்ப வேண்டி அளித்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

காப்பகத்தில் அவர்களுக்கு அடிப்படை கல்வி கொடுக்கவும் நீதிபதி பரிந்துரை செய்திருந்தார்.

ஒரு ஆண்டு காலமாக காப்பகத்தில் இருந்துவந்த மூன்று பெண்களும் தங்களை விடுவிக்கக் கோரி மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

செப்டம்பர் 24-ம் தேதி மனுக்களை விசாரித்த நீதிபதி பிரித்விராஜ் சவன், விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின்படி (1956) விபச்சாரத்தில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று கூறி மூன்று பெண்களுக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டார்.

நீதிபதி “இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூன்றாவது பிரிவின்படி, வயது வந்த பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் தங்கலாம், சுதந்திரமாக இந்தியா முழுக்க சுற்றித் திரியலாம், விருப்பத் தொழிலை தேர்வு செய்யலாம் ” என்று கூறியுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள், விருப்பத்துக்கு மாறாக அவர்களை காப்பகத்தில் தங்க வைத்தது தவறு எனவும் கூறினார்.

பொது இடங்களில், வணிக நோக்கில் ஒருவரை விபச்சாரத்திற்குத் தூண்டுவது, ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே விபச்சார தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை கொடுக்க முடியும் என்று நீதிபதி பிரித்விராஜ் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்