Aran Sei

‘ பாலியல் குற்றங்களைக் குறைக்க, பெண்களை சரியாக வளர்க்க வேண்டும்’ – பாஜக எம்எல்ஏ

த்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளம் பெண், கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தப் படுபாதகச் செயலுக்கு நீதி கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பல்லியா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், பெண் பிள்ளைகளை சரியாக வளர்ப்பதன் மூலமே பெருகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் சுரேந்திர சிங் “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தாலும் சரி, பிராமணராக இருந்தாலும் சரி, பெண் என்பவள் பெண்தான்” என்று கூறியுள்ளார்.

“காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தவறான தகவல்களை கூறி, அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“அரசு மட்டும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்க முடியாது, ‘புனிதத் தன்மையை’ பாதுகாப்பதன் மூலம் பெற்றோர்களால்தான் அதை தடுக்க முடியும்” என்று கூறியுள்ள அவர் “பெண்களை சரியாகவும், சமூக மதிப்புகளின்படியும் வளர்ப்பதன் மூலமே பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும்” என்று சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

சுரேந்திர சிங் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது இது முதல்முறையல்ல.

2017-ம் ஆண்டில், உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமி கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, அதை மறுத்து சுரேந்திர சிங் பேசி வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொரு பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கர், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணத்திற்கு காரணமான குற்றத்திற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்