Aran Sei

`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

credit : indianexpress.com

மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் செயல்திறனை இழந்தவர். கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய் மற்றும் நாள்பட்ட முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்.

“2014 லிருந்து சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தொலைபேசியில் பேச அனுமதிப்பதில்லை. கடிதம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க மறுக்கின்றனர்” என்று அவரது மனைவி வசந்த குமாரி குற்றம்சாட்டியுள்ளார்.

“சென்ற மாதம் அவரிடம் கொடுப்பதற்கு மருந்துகள், புத்தகங்கள், உடைகள் எடுத்துச் சென்றிருந்தேன். இவற்றில் எதையும் சிறைத்துறை அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இரண்டு வாரம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். அப்போதும் நான் கொண்டுபோன எதையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அக்டோபர் 21 க்குள் மீண்டும் ஒரு முறை போக முயற்சிப்பேன்” என்று சாய்பாபாவின் வழக்கறிஞர் ஆகாஷ் சரோட் தி இந்து வுக்குத் தெரிவித்துள்ளார்.

‘சாய்பாபா அனுபவிக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் அநியாயக் கட்டுப்பாடுகள்’ குறித்து அவரது மனைவி வசந்த குமாரி மகாராஷ்டிர கூடுதல் சிறைத்துறை இயக்குநர் சுனில் ராமனந்த் மற்றும் நாக்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அனுப்குமார் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“எந்த அத்தியாவசியப் பொருட்களும் கொடுப்பதில்லை என்று சொல்வது 200% அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கொரோனா தொற்றால் நாங்கள் செய்தித்தாள்களைச் சிறைக்கு எடுத்துச் செல்வதை மார்ச் மாதமே நிறுத்திவிட்டோம். புத்தகங்கள் மற்றும் கடிதங்களை நாங்கள் படித்த பிறகு சரி என்றால் கொடுப்போம்” என்று காவல் கண்காணிப்பாளர் அனுப்குமார் தி இந்து வுக்குத் தெரிவித்துள்ளார்.

எவையெல்லாம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று கேட்டதற்கு “சிறைத்துறை நிர்வாகம் புத்தகங்களைப் பரிசோதிக்கும். அது காந்தியைப் பற்றியோ, விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றியோ புராணத்தைப் பற்றிய புத்தகங்களாகவே இருந்தால் அனுமதியுண்டு”  என அனுப்குமார் பதிலளித்துள்ளர்.

“பத்திரிகை அல்லது மற்ற வாசிப்பு சார்ந்தவைகளில் விஷயங்கள் சரியானதாக இருக்க வேண்டும். உடைகளைப் பொறுத்தவரை கொரோனா காலத்தில் தொற்று பரவலைத் தடுக்க வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உடைகளைச் சிறைக்கு எடுத்துச் செல்வதை நிறுத்திவிட்டோம்” என்று அனுப்குமார் தி இந்து வுக்குத் தெரிவித்துள்ளார்.

“டிஐஜி இவற்றை உறுதிப்படுத்த நாளை நாக்பூர் சிறைக்குச் செல்கிறார்” என்று சிறைத்துறை இயக்குநர் ராமனந்த் தி இந்து வுக்குத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்