Aran Sei

உற்பத்தி விலையை மறுத்த தனியார் மண்டி – அறுவடைப் பயிரை அழித்த விவசாயி

ரு கிலோ காலிஃப்ளவருக்கு ஒரு ரூபாய் தான் தரமுடியுமென்று காய்கறி மண்டி தெரிவித்ததால் வேதனையடைந்த பீஹார் விவசாயி, தன்னுடைய நிலத்தில் ட்ராக்டரை ஓட்டி விளைபொருட்களை அழித்துள்ளார். 

பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தின் முக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் யாதவ், தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் காலி ஃப்ளவர் விளைவித்திருந்தார். ஒவ்வொரு காயின் எடையும் 2.5 முதல் 3 கிலோ வரை இருந்ததால், நல்ல வருவாய் கிடைக்கும் என நம்பியிருந்தார். 

மண்டிக்கு சென்று உற்பத்திப் பொருளை விற்பது குறித்து கேட்ட போது, காலிஃப்ளவர் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும், ஒரு குவிண்டால் நூறு ரூபாய்க்குமே வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு குவிண்டால் காலிஃப்ளவரை அறுவடை செய்யவே 150 ரூபாய் தேவைப்படும் நிலையில், ஒரு கிலோ உற்பத்தியை ஒரு ரூபாய்க்கு விற்பது நஷ்டத்தை தரும் என்பது ஓம்பிரகாஷிற்கு புரிந்தது. இதனால் மனமுடைந்து போன ஓம்பிரகாஷ், தன் கிராமத்திற்கு வந்து, வயலில் ட்ராக்டரை ஓட்டி, அறுவடைக்கு தயாராக இருந்த விளைபொருட்களை அழித்துள்ளார். 

“கடந்த இரண்டு நாளாக 3.5 ஏக்கர் நிலத்தை உழுதிருக்கிறேன். இன்னும் 1.5 ஏக்கர் நிலம் பாக்கி இருக்கிறது. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என நான் நினைத்ததே இல்லை. இந்தியாவில் விவசாயிகளுக்கான இடம் எது என்பதை இப்போது புரிந்து கொண்டேன்” என்று செவ்வாய் அன்று தி டெலிகிராஃப் – யிடம் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

காலிஃப்ளவர் வழக்கமாக 700 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மண்டியில் விற்கப்படும். தற்போது சந்தையில் வழங்கல் (supply) அதிகமாக இருப்பதாலும், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியினாலும் மண்டியில் காலி ஃப்ளவர் கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

நிதிஷ் குமார் அரசு 2006 ஆம் ஆண்டின், விவசாய உற்பத்தி சந்தைக் குழுச் சட்டத்தை ரத்து செய்ததனால் அரசு மண்டிகள் இல்லாமல் போனது. அதனால், பீஹாருக்கு அருகில் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த வணிகர்கள் தான் உற்பத்தியின் விலையை நிர்ணயிக்கிறார்கள். 

“ஒரு ஏக்கர் இருபத்தைந்தாயிரம் எனும் கணக்கில், ஐந்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தேன். ஒவ்வொரு ஏக்கரிலும் காலிஃப்ளவர் பயிரிட ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறேன். காலிஃபளவர் விதைகள் ஒரு கிலோ நாற்பதாயிரம் ரூபாய். உரம், பூச்சிக் கொல்லி, தொழிலாளர்கள் சம்பளம், நீர்பாசனம் என ஒவ்வொன்றுக்கும் செலவு செய்ய வேண்டும். இயற்கை அனுமதித்து, பயிர் நன்றாக இருந்து, சந்தை நல்ல நிலையில் இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஐந்து லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இல்லையென்றால், வருவாய் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த வருடம் போல் மோசமாக எப்போதும் இருந்தது இல்லை” என்று ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

ஒன்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஓம்பிரகாஷ், பயிரிடுவதற்கு ஒரு தேசிய வங்கியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். 

“ஏன் சந்தையில் விலைகள் இவ்வளவு குறைவாக இருக்கிறதென எனக்கு புரியவில்லை. எங்களை போன்ற விவசாயிகளைப் பாதுகாக்க அரசு என்ன செய்கிறதெனவும் எனக்கு புரியவில்லை. ஒரு பெரிய குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. வருகின்ற நாட்களில்,  யாராவது கடன் கொடுங்கள் என எல்லாரிடமும் கெஞ்ச வேண்டியதாக இருக்கும்” என்று அந்த விவசாயி வருத்தத்துடன் கூறியுள்ளார். 

நாடு முழுவதும், விவசாயிகள், மத்திய அரசின் புது விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதும் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

(டெலிகிராஃப் இந்தியா இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்) 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்