Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் – நாடு முழுவதும் தொடரும் போராட்டம்

credits:hindustanepaper.in

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்திருந்தது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாக்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இவை ’கருப்பு மசோதாக்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மாநிலங்களவையில் செப்டம்பர் 20-ம் தேதி இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓட்டெடுப்பு நடத்தக் கோரியும், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி, மசோதாக்களை நிறைவேற்றியதாக அறிவித்தார்.

செப்டம்பர் 21 அன்று, அவை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ.பிரையன் உட்பட 8 எம்.பி.க்களை ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை ஆதரித்து அவைகளைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

போராட்டத்தை கைவிட்ட பிறகு செப்டம்பர் 23-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் ’விவாசாயிகளை காப்போம்’ என பதாகைகள் தாங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.

அன்று மாலை, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து, சிரோமணி அகாலி தளம் கட்சி விலகுவதாக சனிக்கிழமை, அக்கட்சியின் தலைவர் சுர்ஜித் சிங் அறிவித்தார்.

நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சிகள், மசோதாக்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து சட்ட அந்தஸ்து வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் “இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மரண தண்டனை. நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

”இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான ஆதாரம் இது” எனவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்