Aran Sei

ஜியோ கோபுரங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் விவசாயிகள் – தவிர்க்குமாறு சங்கங்கள் கோரிக்கை

Image Credit : Indian Express

பஞ்சாபில் போராடும் விவசாயிகள் தமது நிலங்களில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ கோபுரங்களுக்கான மின் இணைப்பை துண்டிப்பதை தொடர்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 150 மொபைல் கோபுரங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இது வரையில் 1,338 மொபைல் கோபுரங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மாநிலத்தின் தொலைதொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து வேலை செய்யும் பலருக்கும், மருத்துவமனைகளுக்கும், இணைய வழி கல்விக்கும் இணைய இணைப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிரான விவசாயிகளின் புறக்கணிப்பு இயக்கம், கோபுரங்களுக்கு மின் இணைப்பை துண்டிப்பதாக தொடர்ந்திருக்கிறது. பதிந்தா பகுதியிலும் ஃபசில்கா பகுதியிலும் பல எல்லைப் புற கிராமங்களில் இது செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மான்சாவில் உள்ள மூசா கிராமத்தில் மொபைல் கோபுரத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கம்பம் பிடுங்கி எறியப்பட்டுள்ளது. கம்பிகளை சரிசெய்யச் சென்ற நிறுவனத்தின் ஊழியர்களையும் கிராம மக்கள் துரத்தி விட்டிருக்கின்றனர்.

“இத்தகைய அழைப்பை நாங்கள் ஒருபோதும் விடுக்கவில்லை. மொபைல் கோபுரங்களுக்கு மின் இணைப்பைத் துண்டிப்பதையோ, அவற்றுக்கு சேதம் விளைவிப்பதையோ செய்ய வேண்டாம் என்று உங்கள் உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்களது கவனம் எல்லாம் ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தை புறக்கணிப்பதுதான். இதையும் மீறி யாராவது இத்தகைய செயல்களை செய்கிறார்கள் என்றால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகள் மீது மிக கோபமாக இருக்க வேண்டும்” என்று பாரதிய கிசான் யூனியன் – உக்ரஹான் துணைத் தலைவர் ஷிங்கார சிங் மான் இந்தியன் எக்ஸ்பிசிடம் கூறியுள்ளார்.

கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவரும் அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டி (AIKSCC) ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் தரம்பால், “பஞ்சாப், ஹரியானா கிராமங்களில் உள்ள அனைவருக்கும் எங்களது வேண்டுகோள்… நமது கவனம் புறக்கணிப்பதில் மட்டுமே, வேறு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்

AIKSCC-ன் செயற்குழு உறுப்பினர் ஜக்மோகன் சிங், “இது போன்ற செயல்களை தவிர்க்குமாறு சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் 32 விவசாய சங்கங்களும் விவசாயிகளுக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்துள்ளன. நமது போராட்டங்கள் இதுவரை அமைதியாக தொடர்கின்றன, அவை அமைதி வழியிலேயே தொடரட்டும்.”

“இதை சில விஷமிகள் செய்வதாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், நாங்கள் எங்கள் உறுப்பினர்களிடம் ஜியோ தொடர்புகளை புறக்கணிப்பதில் கவனம் செலுத்துமாறு உறுதியாக கூறியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்