மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில், பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரை வைத்து வாக்காளர்களை மிரட்டி வருகின்றனர் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சோனாசுரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, நந்திகிராம் தொகுதியில் உள்ள கிராமப்புற வாக்காளர்களை மிரட்டவும் , பாஜகவிற்கு ஆதரவான சமநிலையை உருவாக்கவும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினரை நிறுத்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் தொகுதியில் இருந்து மகத்தான வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும், தனது கட்சியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரச் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளியிலிருந்து வந்திருக்கும் காவல்துறையினர் முறைகேடாக நடந்து கொண்ட சம்பவம்குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நந்திகிராமில் மதக் கலவரங்களைத் தூண்டும் எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடலாம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
“நந்திகிராமில் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர். வழிபாட்டுத் தலங்களில் எந்தப் பொருளையும் வைத்துப் பதற்றத்தைத் தூண்டுவதில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கலவரக்காரர்களை தோற்கடிப்போம்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.