Aran Sei

“பிரதமர் அவர்களே ! மக்களிடம் கொள்ளை அடிக்க வேண்டாம்”- ராகுல் காந்தி

Credits The Week

தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தால் பயனடைந்த வியாபாரிகளிடம் பேசிய பிரதமர் மோடி, ‘சுய சார்பு இந்தியாவில் இது ஒரு முக்கியமான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற, தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

கொரோனா பொது முடக்கத்தால் நலிவடைந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை வனிகர்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “இத்திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் ஓராண்டு காலக் கடனாகப் பத்தாயிரம் ரூபாய் வரை பிணையில்லா பணி மூலதனக் கடன் பெறலாம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால் பயனடைந்துள்ள உத்திர பிரதேச மாநில சாலையோர வியாபாரிகளை நரேந்திர மோடி காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார். இந்தக் காணொலி சந்திப்பில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

சந்திப்பில் பேசிய வாரணாசியைச் சேர்ந்த மோமோ வியாபாரி, கடைக்கு முகக்கவசம் அணிந்து வந்து, தொகையை இணைய வழியாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோமோ இலவசம் என்று அறிவித்திருப்பதாக கூறியபோது மோடி அவரது முயற்சியை பெரிதும் பாராட்டினார்.

தெருவோர வியபாரிகளுக்கு கடன் தொகை வழங்கியதற்காக வங்கி ஊழியர்களுக்கும் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

 

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி “தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம் ஜூன் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே மாதத்தில் இணையவழி விண்ணப்பங்கள் வர ஆரம்பித்தன. இதுபோல ஏழைகளுக்கன திட்டங்கள் துரிதமாக செயல்படுத்த முடியும் என்பதை யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டர்கள்.” எனக் கூறியுள்ளார்.

 

“இந்த நிதி கேட்டு விண்ணப்பிக்க எழுத்துப்பூர்வ அலுவல்கள், இடைத்தரகர், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவது இது எதுவுமே தேவையில்லை. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தெருவோர வியாபாரி யார் உதவியையும் கோர வேண்டிய அவசியம் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 25 லட்ச விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், 12 லட்ச தெருவோர வியாபாரிகளுக்கு இந்த நிதித் திட்டத்தின் கீழ் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடன் தொகையை திருப்பி செலுத்துவதன் மூலம் ஏழை எளியவர்கள் அவர்களுடைய நேர்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மேலும் உயர்த்தப்படும் என்ற செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

“பிரதமர் அவர்களே! பொது மக்களிடம் பணத்தைக் கொள்ளை அடித்து உங்கள் நண்பர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்கள். சுய சார்பாக இயங்குங்கள்.” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்